சென்னை: மதுரவாயலைச் சேர்ந்த மாரிசாமி, பவானி தம்பதி தியாகராய நகரில் உள்ள ஒரு தங்க நகைக் கடையில் சேமிப்புத் திட்டத்தின் மூலமாகப் பணம் கட்டி சுமார் 5 சவரன் நகையை வாங்கியுள்ளனர். பின் வீட்டுக்கு திரும்பிய தம்பதி தங்க நகைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை ஆட்டோவில் தவறவிட்டதை அறிந்து, மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிசிடிவி மூலமாக ஆட்டோவை அடையாளம் கண்ட காவல்துறை, ஓட்டுநரான தீனதயாளன் என்பவரிடமிருந்து தங்க நகை மற்றும் செல்போனை மீட்டனர். நகை ஆட்டோவில் இருப்பது தெரியாமல் தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களுக்குச் சவாரிகள் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
துரைப்பாக்கத்தில் தனியார் ஐடி நிறுவனத்தில் தீ விபத்து: சென்னையடுத்த துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் 9 அடுக்கு கொண்ட கட்டிடத்தில் பல்வேறு ஐடி கம்பெனிகள் இயங்கி வருகிறது. இதில் 9வது மாடியில் கிடங்கு போன்று அமைத்து, அதில் பழுதடைந்த கணினி பொருட்கள், மின் சாதன பொருட்கள் ஆகியவற்றைத் தேக்கி வைத்துள்ளனர். இன்று மதியம் 12.30 மணியளவில் திடீரென தீப்பற்றி மளமளவென புகை வரத் துவங்கியது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அனைத்து ஊழியர்களும் துரிதமாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் துரைப்பாக்கம், திருவான்மியூர், மேடவாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட 4 தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, சுமார் 1 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உயரமான கட்டிடம் என்பதால் ஸ்கை லிப்ட் எனப்படும் தீயணைப்பு வாகனமும் இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது. தீ அணைக்கப்பட்டாலும் மீண்டும் தீ விபத்து ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கைக்காக இரு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்கள் பேருந்தின் கூரை மீது ஏறி அட்டகாசம்: சென்னை விவேகானந்தர் இல்லத்திலிருந்து திரு.வி.க நகரை நோக்கி 38சி பேருந்து சென்று கொண்டிருந்தது. புரசைவாக்கம் டவுட்டன் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, இரு இளைஞர்கள் பேருந்து மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் செய்து கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து ஓட்டுநர் பேருந்தை வசந்தி தியேட்டர் நிறுத்தம் அருகே நிறுத்தியுள்ளார். இதனால் அந்த இரு இளைஞர்களும், தகாத வார்த்தையில் பேசியும் பேருந்தில் பயணிக்கும் பயனாளிகள் மற்றும் பெண்களுக்கு அச்சுறுத்தும் வகையில் கிண்டல் செய்துள்ளனர். இளைஞர்கள் சகபயணிகளைத் தகாத வார்த்தைகளில் பேசும் வீடியோ இணையத்தில் வைராலாகி வருகிறது.
மேலும், சென்னை மாநகர பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றும், பேருந்து படிக்கட்டில் தொங்கிய படியும், கூரை மீது ஏறுவதும், பேருந்து ஜன்னல் கம்பி பிடித்துப் பல விதமான வித்தை காட்டி வருகின்றனர். இது மட்டுமின்றி, பெண் பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் இந்த நடவடிக்கை சமூகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்காது என்பதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் முக்கிய பஸ் நிறுத்தங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரோவில் இருந்த 31 சவரன் நகையை காணவில்லை:கேகே நகர் பகுதியைச் சேர்ந்த அலோசியஸ் ஜோசப். இவர் வடபழனி காவல் நிலையம் குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், "கடந்த 13 ஆண்டுகளாக நான், கேகே நகர் பகுதியில் வசித்து வருகிறேன். CHOLA பைனான்ஸ் நிறுவனத்தில் இணை பொது மேலாளராகப் பணி புரிந்து வருகிறேன். கடந்த சில மாதங்களாக எனது வீட்டின் பீரோவில் இருந்த நகைகள் காணாமல் போவதாக என் மனைவி தெரிவித்து வந்தார். எனக்கு போதிய நேரம் இல்லாததால் கணக்கு பார்க்காமலிருந்து வந்தேன்.
கடந்த 03ந் தேதி அன்று எனக்கு விடுமுறை என்பதால் நாங்கள் பீரோவில் இருந்த தங்க நகைகளை எடுத்து சரிபார்த்த போது, அதில் நீளமான ஆரம் - 1, மாங்கா வடிவ ஆரம் -1, செயின் பிரேஸ்லெட் -2, வி ஆரம் -1, நீளமான செயின் -2, பேன்சி நெக்லஸ் - 2 என சுமார் 31 சவரன் நகைகளைக் காணவில்லை. வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்துக் கிடைக்காததால், எனது வீட்டில் வேலை செய்யும் பெண் சுமத்ராவிடம் கேட்ட போது உரிய விளக்கம் ஏதும் அவர் கொடுக்கவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில், அவரை விசாரணை செய்து என்னுடைய நகைகளை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
தற்கொலை செய்துகொண்ட காவலர் குடும்பத்திற்கு போலீசார் நிதியுதவி:சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி வந்த காவலர் அருண் என்பவர் கடந்த ஜூலை மாதம் 10 தேதி குடும்ப பிரச்சனை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இந்த நிலையில் அருண் காவல் துறையில் இணைந்து பணியாற்றி வந்தது அவரின் குடும்பத்தினருக்கு பெரும் உதவிக்கரமாக இருந்து வந்துள்ளது. மேலும் அருணின் பெற்றோர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அருண் மற்றும் அவரது மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அருளின் தாய் மற்றும் தந்தை இருவரும் வறுமையின் பிடியில் சிக்கிக் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதனை அறிந்த அருணுடன் தேர்வான 2022 பேட்ச் காவலர்கள், அவரின் குடும்பத்திற்கு உதவி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து வாட்ஸ் அப் குழு மூலமாக அருண் பேட்சில் தேர்வான காவலர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதன் மூலம் ஒவ்வொரு காவலர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சக காவலர்கள் 7 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திரட்டி அதனை அருணின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் சககாவலர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.