சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட பிளட் தின்னர் சிகிச்சை நேற்று இரவு முதல் காவேரி மருத்துவமனையில் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் கழித்த பின்னர் ரத்த நாளங்களில் ரத்தப்போக்கு பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அரசு பணி வாங்கித் தருவதாக பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர், அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் அடிப்படையில், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அழைத்துச் சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
பின்னர், அவர் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. அதில் ரத்த நாளங்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் காவேரி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளது. அதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியின் 58வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்று உள்ளது. 150 மாணவர்கள் இன்று பட்டங்களை பெற்றுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு நீதிமன்ற அனுமதியின்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு முதல் அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது என்பதற்கான நடவடிக்கையை மருத்துவர்கள் செய்ய தொடங்கியுள்ளனர்.
அதில் அவருக்கு ஏற்கனவே ரத்த நாளங்களில் அடைப்பு இருந்ததால், பிளட் தின்னர் என்ற சிகிச்சையை அரசு ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் தொடங்கி இருந்தனர். அந்த பிளட் தின்னர் சிகிச்சை மூன்று அல்லது நான்கு நாட்கள் நிறுத்தினால்தான் ரத்தம் கசிவதிலிருந்து நின்று தீர்வு கிடைக்கும்.
அந்த சிகிச்சை முடிந்த பின்னர்தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிளட் தின்னர் சிகிச்சை நேற்று நிறுத்தப்பட்டது. அவரின் ரத்தப்போக்கு குறித்த பரிசோதனைகளை 4 - 5 நாட்கள் கழித்து ஆய்வு செய்த பின்னர், உடனடியாக அறுவை சிகிச்சை செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவரவரின் விருப்பம். அவருக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது விருப்பம். ஆனால், அவரது துணைவியார் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என விரும்புகிறார்.
யாருக்கு இங்கு சிகிச்சை பெற வேண்டுமென விரும்புகின்றனரோ, அவரின் சுய விருப்பத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிப்பதுதான் மனித நியதி. அவரின் துணைவியார் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் சிகிச்சை அளித்து வருகிறோம். மேலும், எய்ம்ஸ் மருத்துவர்கள் டெல்லியிலிருந்து தற்போது வரை வரவில்லை. இது தொடர்பாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்: என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி மீது முதலமைச்சர் விமர்சனம் - வீடியோ மூலம் பதில் அளித்த ஈபிஎஸ்!