சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என தெரிவித்து, செப்டம்பர் 20ஆம் தேதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி தரப்பில், “அமைச்சர் கைது செய்யப்பட்டபோது உரிய விதிமுறை பின்பற்றப்படவில்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும்.
கைது செய்யப்படுவதற்கு முன் அமைச்சரிடமோ, அவரது உறவினரிடமோ அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதய அறுவை சிகிச்சை செய்திருப்பதாலும், நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சையில் இருப்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது. சட்ட விரோதமாக செந்தில் பாலாஜி கைது செய்யப்படவில்லை. கைதுக்கு முன் முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டும், செந்தில் பாலாஜி பெற மறுத்து விட்டார்.
அக்டோபர் 15 வரை செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன், ஈஎன்டி, இதய மருத்துவர்கள் என ஏழுக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து கன்காணித்து வருகின்றனர். போக்குவரத்து துறையில் உள்ள 216 வேலைகளுக்கு சுமார் 67.74 கோடி பணப் பரிமாற்றம் நடந்தற்கான பென்டிரைவ் ஆதாரம், அமலாக்கத் துறைக்கு கிடைத்துள்ளது” என தெரிவித்தார்.
இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (அக்.19) தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், “வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் இன்னும் தலைமறைவாக இருப்பதால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மேலும், செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் ஜாமீன் வழங்க முடியாது” என கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குமரி மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு; பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு!