மதுரை: மதுரை மாவட்டம், செந்தலைப்பட்டியைச் சேர்ந்த செல்வம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "எங்கள் கிராமத்தில் பழமையான சோலை ஆண்டவர் கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழாவையொட்டி வரும் 15ம் தேதி மஞ்சுவிரட்டு நடத்த முடிவு செய்துள்ளோம். திருவிழா கமிட்டி தலைவர் என்ற முறையில் மஞ்சு விரட்டுக்கு அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் மனு அளித்தோம்.
இதுவரை எந்தப் பதிலும் இல்லை. கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மஞ்சுவிரட்டு விழாவை நடத்தினோம். இந்த ஆண்டும் எங்கள் கிராமத்தில் சோலை ஆண்டவர் சுவாமி திருக்கோயில் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "அரசாணையில் இடம்பெறாத கிராமங்களில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்கும் பட்சத்தில் பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும்" என வாதாடினார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், "இந்த ஆண்டு திருவிழாக்களையொட்டி மஞ்சுவிரட்டு மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டால் அடுத்த ஆண்டு அனைத்துக்கும் தடை விதிக்கப்படும். மனுதாரர், கிராமத்தில் குறிப்பிட்ட நாளன்று காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: Mudumalai Elephant Attack: முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் பலி!