சென்னை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அண்மையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இரு அணிகளுக்கு இடையே கடந்த 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் தோட்டம் பகுதியைஸ் சேர்ந்த ஏ.எஸ்.சண்முகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியைக் காண சென்றேன். 40,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய அந்த மைதானத்தில் இலவசமாக சுத்தமான குடிநீர் வசதியோ, கழிப்பறைகளோ அமைக்கப்படவில்லை. 100 மில்லி லிட்டர் குடிநீர் 10 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் 100 ரூபாய்க்கும், குளிர் பானங்கள் 50 முதல் 100 ரூபாய்க்கும், சமோசா 50 முதல் 80 ரூபாய்க்கும், சாம்பார் மற்றும் தயிர் சாதம் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு குடிநீர், உணவுப் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும். ஐபிஎல் போட்டிகளின்போது கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பதை தடுக்கக்கோரி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ, சென்னை காவல் ஆணையர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் ஆகியோரிடம் கடந்த 23ஆம் தேதி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது சட்டவிரோதமானது" எனக் கூறினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தரப்பு வழக்கறிஞர், "மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் இலவச குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களில் உணவுப் பொருட்கள் வழங்கினால் மைதானத்திற்குள் வீசுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் வழங்கப்படுவதில்லை. அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக ரசிகர்கள் புகார் அளித்தால் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என வாதாடினார்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு அரசு மற்றும் பிசிசிஐ பதில் அளிக்க உத்தரவிட்டதுடன், அடுத்தகட்ட விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.