சென்னை: துரை கே.முருகன் இயக்கத்தில் ஜேம்ஸ் கார்த்திக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடிக்கும் படம், ‘சீரன்’. நெட்கோ ஸ்டுடியோஸ் சார்பில் அவரே தயாரித்துள்ளார். இனியா, ஆடுகளம் நரேன், சோனியா அகர்வால், அருந்ததி நாயர், ஆஜித், சென்ராயன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் விரைவில் படத்தைத் திரைக்குக் கொண்டு வரும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர் நேற்று (செப் 19) பத்திரிக்கையாளர்கள் சந்தித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக் பேசியதாவது, “இந்தப் படம் எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு, எங்களுக்கு ஆதரவு அளிக்க வந்துள்ள அனைவருக்கும் நன்றி. தயாரிப்பிலும் நடிப்பிலும் இந்தப் படத்தில் நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்த சோனியா அகர்வால், நரேன் மற்றும் இனியா அவர்களுக்கு நன்றி. மேலும் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றி. இயக்குநர் எனக்கு மிகச்சிறந்த நண்பர். அவருடன் இணைந்து பல படங்கள் செய்ய நினைக்கிறேன்.
தயாரிப்பாளருக்கு 1 ரூபாய் கூட நஷ்டம் வரக்கூடாது என்று நினைப்பவர் இயக்குநர், அதே போல் ஒளிப்பதிவாளர் மிகவும் சிறந்த காட்சிகளை இந்தப் படத்தில் உருவாக்கியுள்ளார்.கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். நான் என் சிறு வயதில் பார்த்த விஷயங்களை இந்தப் படத்தில் கொண்டு வர முயற்சி செய்துள்ளோம். ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்” கூறி நன்றிகளை தெரிவித்தார்.
நடிகை இனியா பேசுகையில்
அவர் ஒரு திறமையான தயாரிப்பாளர் மற்றும் நல்ல நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கிறேன். இயக்குநர் மிகவும் பக்குவம் நிறைந்தவர், அவருக்குத் தேவையானது என்ன என்பதில் தெளிவாக இருந்தார். பல பிரச்சனை நடந்தாலும் எந்த விஷயங்களும் படத்தைப் பாதிக்காதவாறு இந்தப் படத்தை அருமையாக உருவாக்கியுள்ளார்” எனக் கூறினார்
நடிகை சோனியா அகர்வால் கூறுகையில், “ இந்தப் படம் ஒரு சமூக அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனக்கு இதன் கதை மிகவும் பிடித்திருந்தது. கோவில் படத்திற்குப் பிறகுக் கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். தயாரிப்பாளர் மிகவும் சிறப்பாகத் தனது பணியைச் செய்துள்ளார். மேலும் அவரது கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
கண்டிப்பாக இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறும். இயக்குநர் ஃபாஸ்டாக வேலை செய்வார் ஆனால் கச்சிதமாக காட்சிகளை உருவாக்கிவிடுவார். படத்தை நன்றாக எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் மிகவும் பொறுமைசாலி அருமையாகக் காட்சியைப் படமாக்கியுள்ளார்” என நன்றிகளை தெரிவித்தார்
நடிகர் செண்ட்ராயன் பேசியதாவது, “இந்தப் படம் மிக விரைவில் சீறிப்பாயும். இயக்குநர் துரை அண்ணன் மிகவும் நெருக்கமானவர், மிகவும் பரபரப்பு மிகுந்தவர். அவரது வேகத்துக்கு ஈடே கொடுக்க முடியாது, இந்தப் படத்துக்காக பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார், தயாரிப்பாளர் இந்தப் படத்தில் மிகவும் அருமையாக நடித்துள்ளார்” எனக் கூறினார்.
நடிகர் ஆஜித் பேசுகையில், “ நான் ஒரு கிராமத்துப் படத்தில் நடிப்பது இதுவே முதல்முறை. ஆரம்பத்தில் எனக்கு இது மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் இயக்குநர் எனக்குப் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தார். அவருக்கு எனது நன்றி. உண்மையில் நடந்த நிகழ்வைப் படமாக உருவாக்கியுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: Made in India: தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை வெளியிடும் ராஜமௌலி!!