நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருக்கிணைப்பாளர் சீமான் ”இடைத்தேர்தலில் பொதுவாக அதிகாரத்தில் உள்ளவர்கள் வெற்றிபெறுவது வழக்கமான ஒன்று. தேர்தல் அமைப்பு முறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். வாக்கு இயந்திர முறையை ஒழித்து வாக்குச் சீட்டு முறை கொண்டுவரப்பட வேண்டும். பணத்தைக் கொடுத்து வாக்கு வாங்கும் பணநாயக முறையை ஒழிக்காமல் நல்ல அரசியலையோ நல்ல அரசையோ நிறுவ முடியாது. பணம் தந்து வாக்கு வாங்கும் முறை இருக்கும் வரை காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களைப் பார்க்க முடியாது” என சீமான் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சீமான், ”உலகத்தில் வாக்கு இயந்திர முறையை இந்தியாவும், நைஜீரியாவும் செயல்படுத்துகின்றன. இரண்டு நாடுகளும் ஊழலில் பெருந்த நாடுகள். மைக்ரோ எலக்ட்ரானிக் சிப், இந்திய எலக்ட்ரானிக் நிறுவனம் இணைந்துதான் வாக்கு இயந்திரங்களைத் தயாரிக்கிறது. இதைத் தயாரிக்கும் ஜப்பான் நாடு அவற்றைப் பயன்படுத்துகிறாதா? வளர்ந்துவிட்ட அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தவில்லை" என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், "டிஜிட்டல் இந்தியா வந்தபின்னர் மூன்று நாள் கழித்து ஓட்டுகளை ஏன் எண்ணுகின்றனர். 50 மாகாணங்கள் கொண்ட அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கு நேரம் மாற்றம் வைத்துள்ளது. ஆனால் வாக்கு சீட்டு முறையில் வாக்குப்பதிவு முடிந்து இரவோடு இரவாக அதிபர் யார் என்பதை ஒரே நாளில் அறிவிக்கிறது. இந்தியாவில் 42 நாட்கள் பள்ளிகளில் பூட்டி வைப்பது ஏன்?" என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ‘நடிகர் விஜய் இதற்கெல்லாம் அஞ்சக்கூடாது’ - சீமான் அறிவுரை