சென்னை: சென்னை மெரினாவில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு 'பேனா நினைவுச் சின்னம்' (Pen memorial for karunanidhi) அமைப்பது குறித்து இன்று பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டமானது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை (ஜன.31) 10.30 மணி அளவில் நடைபெற்றது. இந்நிலையில் நினைவு சின்னத்தை அமைக்க ஒரு பகுதியினர் ஆதரவும் மற்றொரு பகுதியினர் கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனால், கூச்சலோடும் கைகலப்போடும் இந்த கருத்துக் கேட்பு கூட்டம் நடந்து முடிந்தது.
பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு: இக்கூட்டத்தில் மீனவர் சங்கத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்டு பேசினர். குறிப்பாக, இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.அம்ரிதா ஜோதி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினரும் செயலாளருமான கார்த்திக் பங்கேற்று பிரதிநிதிகளின் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்கள் பேசுவதையும் உன்னிப்பாக கவனித்து வந்தனர்.
கூட்டத்தில் கூச்சலிட்டதால் பரபரப்பு: இதனிடையே சில பிரதிநிதிகள் பேனா சின்னத்தை கடலில் நிறுவுவதனால் கடலில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படும் என்றும்; இதனால், தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் பேசினர். இதனால், அரங்கத்திற்கு உள்ளே பங்கேற்ற ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை பேசவிடாமல் தடுத்தனர். எனினும், பேச்சாளர்கள் தொடர்ந்து பேசியதால் எதிர்ப்பாளர்கள் தங்களது இருக்கைகளை விட்டு எழுந்து சென்று மேடைக்கு முன் சென்று கூச்சலிட்டனர். இதனால், பெரும் அமளி ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களை சமாதானம் செய்ய முயற்சித்தபோதும் அமளி குறையவில்லை. இதனால், அங்கு பதற்றம் நிலவியது.
முகிலன் தர்ணா: மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பேசியபோது, 'பேனா சிலையினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, பேனா சிலையை கடலில் அமைக்கக்கூடாது' எனப் பேசினார். எனிமும் ஒரு பகுதியினர் முகிலனை பேசவிடாமல் தொடர்ந்து சத்தம் போட்டு தடுத்தும் கூச்சலிட்டு கொண்டும் இருந்தனர். இதனால், அவர் பேசுவதை நிறுத்தினார். பிறகு அவருக்கு கொடுத்துள்ள நேரம் கடந்து விட்டது என மேடையில் பேசப்பட்டது. இதனால், முகிலன் மேடையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். பிறகு போலீசார் அவரை வெளியில் தூக்கி சென்றனர். இதனாலும் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
கருணாநிதிக்கு மெரினாவில் இடமளித்ததே தவறு!: பிறகு பேசிய நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான், "கருணாநிதிக்கு பேனா சிலை அமைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், கடலில் வேண்டாம் என்றுதான் கூறி வருகிறோம்" என்று பேசியதால் கூட்டத்தின் ஒரு பகுதியினர் திரும்பவும் கூச்சலிட ஆரம்பித்தனர். இதனைக் கண்ட சீமான் மேடையில் சிறிது தூரம் நடந்து கூச்சலிட்டவர்களை உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார்.
கடலில் நினைவுச் சின்னம் அமைக்க விடமாட்டோம்: பிறகு கூச்சல் சத்தம் குறைந்த நிலையில், மறுபடியும் பேசத்தொடங்கினார். அப்போது பேசிய அவர், "கருணாநிதியை மெரினாவில் புதைப்பதற்கு இடம் கொடுத்ததே தவறு. இதில் வேறு பேனா சிலையா?'' என கேள்வி எழுப்பினார். பேனா சிலை நிறுவ வேண்டும் என்றால் அறிவாலயம் உள்ளது (அ) கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்துக்கொள்ளலாம் என்ற அவர் பேனா சிலையை கடலுக்குள் நிறுவவிடாமல் இறுதி வரை போராடுவேன் என்றார்.
பிடிங்கி தூக்கி எறிந்துவிடுவோம்: "பேனா சிலையை தற்போது நிறுவினாலும், என்னுடைய ஆட்சி வந்த பிறகு அதனை தூக்கி எறிந்து விடுவேன்" என சீமான் சாடினார். பிறகு பேசிய மாவட்ட ஆட்சியர், பிரதிநிதிகளின் அனைத்து மனுக்களும் மாநில மத்திய அரசுகளுக்கு அனுப்பப்படும் என்றார். பேனா நினைவுச்சின்னம், பொதுப்பணித்துறை சார்பில் ரூ.81 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின்படி, 2 ஆயிரத்து 263 சதுர மீட்டர் பரப்பில் பேனா நினைவுச்சின்ன பீடம், 2 ஆயிரத்து 73 சதுர மீட்டர் பரப்பில் நடைபால அமைப்பு, 1856 சதுரமீட்டர் பரப்பில் பின்னல் நடைபாலம், 1610 சதுர மீட்டர் பரப்பில் கடற்கரைக்கு மேல் பாதசாரிகள் பாதை,748 சதுர மீட்டர் பரப்பில் நினைவிடத்தில் இருந்து பாலம் வரையிலான நடைபாதை என மொத்தம் 8 ஆயிரத்து 551 சதுர மீட்டர் பரப்பில் பேனா நினைவு சின்னம் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம்