சமீப காலங்களாக தமிழ்நாட்டில் சாதிய வன்முறை அதிகரித்து வருகிறது. தங்கள் சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சாதியை வைத்து போராடிய காலம் போய் தற்போது தங்கள் சாதியினருடைய ஆதிக்கத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக கலவரங்கள் கட்டவிழ்க்கப்படுகிறது. தங்கள் தலைமுறையோடு சாதி வன்முறை ஒழியட்டும் என்று பலர் போராடி வந்த நிலையில், அந்தத் தீ தற்போது அடுத்த தலைமுறையினரையும் பற்றிக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நாளன்று வாக்கு செலுத்தச் சென்ற குறிப்பிட்ட சமுதாயத்தினரை பிற சமுதயாத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் வசை பாடியதில் அது இரு பிரிவினருக்கு இடையேயான கலவரமாக உருவெடுத்து பொன்பரப்பி கிராமத்தில் வன்முறை நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் இன்னும் சாதியத் தீ ஓயவில்லை என்பதை பட்டவர்த்தனமாக வெளி உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இதேபோல், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி வேதாரண்யத்தில் இரு இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் இரு சமுதாயத்தினருக்கு இடையேயான மோதலாக மாறியது. இதில் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலிருந்த அம்பேத்கர் சிலை துண்டாடப்பட்டது. இதில் அந்த சிலைக்கு அருகிலே காவல் நிலையம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய அண்ணல் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்களும் கண்டனங்களும் குவிந்தன.
இந்நிலையில், சாதிய வன்முறை அதிகரித்திருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு ஆகியோர் ஈடிவி பாரத் செய்திகளுக்காக சிறப்பு நேர்காணல் அளித்துள்ளனர்.
சீமான்
இரு நபர்களுக்கிடையே ஏற்படும் மோதல் இரு சாதியினருக்கு இடையேயான மோதலாக மாறுவது வாடிக்கையாகி வரும் நிலையில், தலைவர்களின் சிலையை உடைப்பதும் வழக்கமாகி வருகிறது.
இது ஒருபுறமிருக்க பிஞ்சிலே நஞ்சை விதைக்கும் விதமாக பள்ளி செல்லும் மாணவர்கள் தங்களுடைய சாதி அடையாளங்களை வெளிப்படுத்த கையில் வண்ண கயிறுகளை அணிந்து வருகின்றனர். இந்த பிரச்னை வெளியில் வந்தவுடன் இதனைத் தடுக்க பள்ளிக் கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தாலும் பள்ளி மாணவர்களிடையே சாதிய பாகுபாடு என்பது அனைத்து தரப்பினரையும் கவலைக்குள்ளாக்குகிறது.
வன்னியரசு
சாதியை கடந்து சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய இளைஞர்கள், அதே சாதித் தீயில் விழுந்து இரையாகி வருகின்றனர். நாட்டின் எதிர்காலமாக விளங்கும் இளைஞர்கள் சாதிய வன்மத்திலிருந்து விடுபட அரசு வியூகங்களை வகுத்து தீவிரமாக செயல்பட வேண்டும் என்பதே சமுக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது என்றார்.