மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அவரை, அவரது தாயார் பத்மா, சிறைத்துறை அனுமதி பெற்று, சென்னையிலிருந்து வேலூர் சென்று சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் நளினியை வேலூரில் உள்ள பெண்கள் சிறையிலிருந்து சென்னையில் உள்ள புழல் சிறைக்கு மாற்றக்கோரி, அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில், தனக்கு 80 வயதாகும் நிலையில், தன் மகளை வேலூர் சென்று பார்த்து வருவதில் சிரமம் இருப்பதாகக் கூறி, சிறைத்துறையிடம் கடந்த மாதம் மனு அளித்துள்ளதாகவும்; இதுவரை அந்த மனு பரிசீலிக்கப்படாததால், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழ்நாடு அரசும் சிறைத்துறையும் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.