சென்னை: திமுக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான 7 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இரண்டாவது நாளாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணியிடம் 3 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் சோதனை நடத்தியது ஏன் என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
பொன்முடி கனிமவளத்துறை அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரது மகன் கௌதம சிகாமணி, அவரின் உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்குச் சொந்தமான ஐந்து குவாரிகளுக்கு சட்டவிரோதமாக செம்மண் எடுக்கும் உரிமம் வாங்கி கொடுத்த வழக்குத் தொடர்பாக சோதனை மேற்கொண்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த குவாரிகள் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை பல்வேறு கணக்குகளில் பரிமாற்றம் செய்திருப்பதும், குறிப்பாக இந்தோனேஷியா மற்றும் சவுதி ஆரேபியா ஆகிய நாடுகளில் உள்ள ஒரு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் 2008ஆம் ஆண்டு இந்தோனேஷியாவைச் சார்ந்த நிறுவனத்தின் 41.57 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட பங்குகளை, 2022ஆம் ஆண்டு 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதும், பல கோடி ரூபாய் ஹவாலா பணம் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதும் அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கணக்கில் காட்டப்படாத 81.7 லட்சம் ரூபாய் மற்றும் 13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு ரூபாய்களை, சென்னையில் உள்ள பொன்முடி வீட்டில் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் வெளியிட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தனது இரண்டாவது மகன் அசோக்கிற்கு சொந்தமான மருத்துவமனையைச் சார்ந்தது என விசாரணையில் தெரிவித்துள்ளதாகவும், இதனால் உடனடியாக அமலாக்கத்துறை மருத்துவமனையில் சோதனை மேற்கொண்ட போது, அதற்காக சட்டவிரோதமாக ரசீதுகளை தயார் செய்து சமர்ப்பிக்க திட்டமிட்டதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான முறையான ஆவணங்கள் அமைச்சர் பொன்முடியிடம் இல்லை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முறைகேடாக சம்பாதித்த பணத்தை அமைச்சர் பொன்முடி சொத்துக்களாகவும், நிறுவனங்களின் பங்கில் முதலீடு செய்ததும், இன்னும் பிற முதலீடுகளில் ஈடுபட்டு இருப்பதும் அமலாக்கத்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பொன்முடிக்குச் சொந்தமான முக்கிய ஆவணங்களை கண்டுபிடித்து, அவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பொன்முடிக்கு சொந்தமான 41.9 கோடி ரூபாய் வைப்புத் தொகையை முடக்கி இருப்பதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மும்பையில் 3வது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் - விரைவில் தேதி அறிவிப்பு!