கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதன் தாக்கம் வெளிப்படத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை கேஜி வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 16ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை, விடுமுறையளிக்குமாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 'தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் பள்ளிகளிலும் அனைத்து கேஜி வகுப்புகள், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் வரும் 31ஆம் தேதி வரை விடுமுறையளிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிவிப்பில், பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்குப் பயணிப்பதையும், பொது இடங்களில் கூடுவதையும் தவிர்க்க வேண்டுமென்றும், கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்குக் குழந்தைகள் செல்வதைத் தவிர்க்கவும், தனிநபர் சுகாதாரத்தை பாதுகாக்கவும், வீட்டிற்குள் நுழையும் போதும் அவ்வப்போதும் கைகளை சோப்புப் போட்டு சுத்தமாக கழுவி, அதை உறுதி செய்யவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கைகளைச் சுத்தம் செய்யாமல் முகத்தைத் தொட வேண்டாம் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின் போது குழுவாக விளையாடதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு, சுத்தமாக கழுவுவதை உறுதிசெய்யவும் அறிவுரை வழங்கியுள்ளார்.
எனவே, தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் அனைத்து கேஜி வகுப்புகளுக்கும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுவதாகவும், அனைத்துப் பள்ளிகளும் கட்டாயம் இதனை பின்பற்றவேண்டுமெனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா விடுமுறை: பள்ளிகளில் எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது...