சென்னை: தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த நிர்வாகி அண்ணாமலை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப்பேட்டியில், 'மத்திய அரசு புதியக் கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்கள் எதிர்ப்பதற்குக்காரணம் 3,5,8,10,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்ததால் தான்.
அந்த தேர்வினை எழுதி முடித்தவர்கள் உயர் கல்விக்கு செல்வதற்கு நுழைவுத்தேர்வு வேண்டும் எனக் கூறினார்கள். அதனைத்தான் எதிர்த்தோம். கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல், அவர்கள் தங்களின் குலத்தொழிலை செய்யும் நிலைமை ஏற்படும். மத்திய அரசிலும் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வினை நிறுத்திவிட்டனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், புதியக்கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நுழையவிட மாட்டோம் என முதலமைச்சர், அமைச்சர்கள் கூறி வருகின்றனர். 4,5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு முதல் பருவத்தேர்விலேயே பொதுத்தேர்வு வைத்த ஒரே மாநிலம், தமிழ்நாடு தான்.
புதிய கல்விக்கொள்கையில் 3,5,8ஆம் வகுப்பிற்கு ஆண்டிற்கு ஒரு முறை பொதுத்தேர்வு வைத்தனர். ஆனால் முதல் பருவத்தேர்விலேயே பொதுத்தேர்வினை தமிழ்நாட்டில் வைத்துள்ளனர். அரசு புதியக்கல்விக்கொள்கையை எதிர்க்கிறார்கள். அரசு அலுவலர்கள் நேரடியாகவே புதியக்கல்விக் கொள்கையை அறிமுகம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 80 விழுக்காடு தொடக்கப்பள்ளிகளில் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளியாகவே இருக்கிறது. மீதமுள்ள 15 விழுக்காடு பள்ளிகளில் தான் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் இருக்கின்றனர். மாணவர்கள் கற்றல் திறனில் மேம்படுவதற்கு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் எப்படி கல்வித்தரத்தை எதிர்பார்க்க முடியும்.
தனியார் பள்ளிகளில் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் உள்ளனர். ஆனால் இங்கு பள்ளிக்கு ஒன்று, இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்களுக்கு எழுதப்படிக்க தெரியாததற்காக ’எண்ணும் எழுத்தும் திட்டம்’ கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இந்த திட்டமும் மத்திய அரசின் புதியக்கல்விக் கொள்கைத் திட்டம் தான்.
1,2,3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் அச்சிடப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனைப் பயன்படுத்தி மாணவர்கள் கற்கவில்லை. காலண்டுத் தேர்வில் ஆசிரியர்கள் கேட்கும் எழுத்தைப் பார்த்து மாணவர் கூறினால் அதற்கு மதிப்பெண் போடப்படும்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் முதல் வகுப்பிற்கு பிரிகேஜியும், 2ஆம் வகுப்பிற்கு எல்கேஜி, 3ஆம் வகுப்பிற்கு யுகேஜி பாடமும் கற்பிக்கப்படுகிறது. இன்னும் ஒன்று, இரண்டு , மூன்றாம் வகுப்பு பாடத்திற்கே வரவில்லை. மாணவர்களுக்கு எழுத்தறிவு, நூலறிவு இல்லாமல் மாணவர்களை புத்தகத்தை எப்படி வாசிக்க வைக்க முடியும்.
பெற்றோர்கள் தனியார் பள்ளியில் கேள்வித்தாள் அளித்தது போல், அரசுப் பள்ளியில் தேர்வு நடத்தப்பட்டதற்கான விவரங்களை கேட்கின்றனர். இதனால் காலாண்டு தேர்வு முடிந்தபின்னர் டிசி கேட்கின்றனர்.
மாணவர்கள் 4 கேள்விக்கான பதில்கள் சரியாக தெரியாத நிலை இருந்தால், 5ஆவது கேள்விக்கு ஆசிரியரே பதில் அளிக்கிறார். இது நவீன குலக்கல்வி திட்டமாக அமைந்துள்ளது. ஏற்கெனவே ராஜாஜி கொண்டு வந்து காமராஜர் மாற்றியது போன்றுள்ளது. அரசுப் பள்ளியில் கல்விமுறை சரியில்லை என தனியார் பள்ளிக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் இதே நிலை கல்வியில் நீடித்தால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பது இல்லாத நிலை ஏற்படும். பள்ளிக்கு ஆசிரியர்கள் சென்றால், பாடம் நடத்துவதை விட்டு விட்டு, புள்ளி விவரம் தயாரிக்கும் பணியிலும், அதனை பதிவேற்றம் செய்வதிலும் நேரத்தைக் கழிக்கின்றனர்.
பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அலுவலர்கள் ராணுவ ஆட்சியை செய்து வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி , செய்தி வந்தால் அதனை பார்த்து நடவடிக்கை எடுப்பதற்கு அலுவலர்களை அழைத்துக் கேட்பார். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாெறுத்தவரையில் அலுவலர்களிடம் ஒப்படைத்துவிட்டோம். பார்த்துக் கொள்ளுங்கள் என கூறுகின்றார்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்