சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை பள்ளி மேலாண்மைக்குழுவின் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கலந்துக் கொண்டு பள்ளியின் மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்
இது குறித்து அவர், “ தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தி, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தரமான கல்வியை அளிக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கான உதவித் தொகைகள் 6 முதல் 12 ம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. மருத்துவக்கல்வி, தொழிற்கல்வியில் சலுகைகள் அளிக்கப்பட்டது போல், தற்பொழுது உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சர் வேண்டுகோள்
இந்நிலையில், அரசுப் பள்ளிகளின் தரம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இதற்குக் காரணம் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட வேண்டிய மேலாண்மைக்குழுகள் முழுமையாக செயல்படுவதில்லை. எனவே அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேலாண்மைக்குழுக்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் தலைமையில் அமைக்கப்பட்டு, அதன் கூட்டத்தை நாளை (20.3.2022) நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
எனவே, இந்தக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்” எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.