சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஏப்.20) வினாக்கள் விடைகள் நேரத்தில், அதிமுக விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர், "விராலிமலை தொகுதி அன்னவாசல் பேரூராட்சியில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ஆவண செய்யுமா?" என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஓடி வந்த இந்தி பெண்ணே கேள், நீ தேடி வந்த நாடு இதுவல்லவே - என்று தன்னுடைய 13வது வயதில் போர் பாவை பாடி, 86வது வயதில் தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்று தந்த கலைஞரின் நூற்றாண்டை ஒட்டி, அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டை போற்றும் வகையில், இந்த கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் அவரைப் பற்றிய பாடம் வருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், "சட்ட விதிகளுக்குட்பட்டு அன்னவாசலில் உள்ள அந்த பள்ளிக்கு இடம் வழங்க முடியவில்லை. பயன்பாடற்ற காவல் நிலைய குடியிருப்பு மற்றும் பொதுப்பணித்துறை சாலையாக இருப்பதாலும் பள்ளிக்கு இடம் வழங்க ஏற்றதாக இல்லை. எனவே பள்ளிக்கு கட்டிடம் கட்ட வருவாய் துறையால் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்டவுடன் நபார்டு திட்டம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்ட ஆவண செய்யப்படும்" என்று கூறினார்.