பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கட்டட வரன்முறைக்கு விண்ணப்பிக்க, நகர் மற்றும் ஊரகத் துறையினரால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளைக் கருத்தில்கொண்டு அவ்வப்போது அரசு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.
கட்டட வரன்முறைப்படுத்த பள்ளிகள் அரசால் வெளியிடப்படும் கட்டட வரன்முறை சார்ந்த சிறப்புத் திட்டங்களைப் பயன்படுத்தி, தங்களது பள்ளிகளின் கட்டடங்களை வரன்முறைப்படுத்த கட்டாயமாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
இதற்கு மேல் வாய்ப்பு ஏதும் வழங்க இயலாது என்ற நிபந்தனையின் அடிப்படையில், 2020 ஜூன் 1ஆம் தேதி முதல் 2022 மே 31ஆம் தேதிவரை இரண்டு ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்க அரசு மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் மற்றும் விதியின்படி, ஏற்கனவே தங்கள் அலுவலகத்தில் ஏதேனும் கருத்துருகள் தொடர் அங்கீகாரம் பெறப்படாத பள்ளிகளிலிருந்து பெற்றிருந்தாலும், உரிய பள்ளிகளிடமிருந்து தற்போது பெற வேண்டும்.
வரும் அக்டோபர் 12ஆம் தேதிக்கு முன்னர் அரசு உதவி பெறும் சுயநிதி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு (6 முதல் 12ம் வகுப்பு வரை) தொடர் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு முன்னாள் துணைவேந்தர்கள் கடிதம்