சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நேற்று (ஜனவரி 19) ஒரே நாளில் 26 ஆயிரத்து 981 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. நோய்ப் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்த நிலையில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக மாணவர்களின் நலன்கருதி 1ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்புவரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டு இந்த மாதம் இறுதிவரை (ஜனவரி 31) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடைபெற இருந்த திருப்புதல் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும், ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், மாணவர்களின்றி பள்ளிகள் செயல்படுவதால் ஜனவரி 22ஆம் தேதி சனிக்கிழமை ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்கி பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதற்கு முன்பாக வாரத்தில் ஆறு நாள்களும் வகுப்புகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கழிவறை சுத்தம்செய்ய சொல்லி மாணவர்களைக் சாதியின் பெயரில் திட்டிய தலைமையாசிரியை கைது