சென்னை: தமிழ்நாடு அரசின் மக்கள் நலன் காக்கும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சமுதாய நலன் மற்றும் மாணவர் நலனிற்காக துவக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டம் தான் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற சிறப்பு திட்டம். பள்ளிக்கல்வி துறையின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான அரசு பள்ளிகளிலும் கடந்த 2023 ஜனவரி 9ஆம் தேதி முதல் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பள்ளிகளை சுத்தம் செய்வதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்களும் உதவிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் கடிதம் எழுதி இருந்தார். மேலும், ஜனவரி 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதிக்குள் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்கவும், அதற்கான பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தி இருந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 24 ஆயிரத்து 350 தொடக்கப் பள்ளிகளை சுத்தம் செய்வதற்கு பள்ளி ஒன்றுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிதியும் அளிக்கப்பட்டுள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மானியத்தொகையில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், நேற்று (ஜன.8) முதல் 10ஆம் தேதி வரை சிறப்பு பள்ளித்தூய்மை பணி செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில், அனைத்து வகுப்பறைகளையும் தூய்மை செய்து கரும்பலகை பயன்படுத்தும் வகையில் இருப்பதை உறுதி செய்தல். ஆசிரியர் அறைகள், ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் உட்பட்ட இதர அறைகளில் தேக்கமடைந்துள்ள தேவையற்ற பொருட்கள் மற்றும் காகிதங்களை கழிவுகளையும் அகற்றம் செய்தல் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், பள்ளி அலுவலகம் மற்றும் தலைமையாசிரியர் அறையை முழுமையாக தூய்மை செய்தல். பள்ளி வளாகத்தில் உள்ள புதர்கள் மற்றும் களைச் செடிகளை அகற்றுதல். பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் மற்றும் பிற அறைகளில் உள்ள தளவாட பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள் தூய்மையாக இருக்கும் வகையில் சுத்தம் செய்தல் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, காலை, மதிய உணவு திட்டத்திற்கான சமையல் அறை நன்கு சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுவதுடன், சமையல் பாத்திரங்கள் முறையாக கழுவப்பட்டு பயன்படுத்துதல் மற்றும் மாணவர்கள் உணவருந்தும் இடம் தூய்மையாகப் பராமரிக்கப்படுதல் போன்ற பணிகள் நடைபெற்றன. மேலும், பள்ளி வளாகத்தில் நீர் தேங்காத வகையில், சுற்றுப்புறம் மேடு, பள்ளம் இன்றி சமப்படுத்திடவும் அனைத்து வகுப்றைகளும் நன்றாக நீரால் தூய்மை செய்யும் பணியும் நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் சேரும் குப்பைகளை எக்காரணம் கொண்டும் எரித்தல் கூடாது எனவும், பள்ளி வளாகத்தில் சேரும் தேவையற்ற குப்பைகளை மேலாண்மை செய்தல், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை இனம் பிரித்தல் மற்றும் மறுசுழற்சிக்காக உள்ளூர் நிர்வாகத்திடம் திடக் கழிவுகளை ஒப்படைத்தல் மற்றும் தாழ்நிலை மற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளை முறையாக தூய்மை செய்து பாதுகாப்பான முறையில் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கை இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் 'மதச்சார்பின்மை மாநாடு': 29 தீர்மானங்கள் நிறைவேற்றம்!