சென்னை: இந்திய நாட்டின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஐஐடி மெட்ராஸ் பெரும் பங்களிப்பு அளித்து வருவதாக, மெட்ராஸ் ஐஐடியின் 60வது பட்டமளிப்பு விழாவில் (60th Convocation of IIT Madras) உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
சென்னை, அடையாறில் உள்ள மெட்ராஸ் ஐஐடியில் இன்று (ஜூலை 22) 60வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2,573 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பி.எச்டி பட்டங்களில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், கடந்த 60 ஆண்டுகளாக இந்திய நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஐஐடி மெட்ராஸ் பெரும் பங்களிப்பு அளித்து வருவதாகவும், சமூகத்தின் அறிவியல் மாற்றத்திற்கும் இந்நிறுவனம் அதிக பங்களிப்பு அளித்து இருப்பதாகவும் புகழாரம் சூட்டினார். இந்திய நாட்டில் மட்டுமின்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஐஐடி மாணவர்களின் பங்களிப்பு இருப்பதாகவும், இளம் ஆராய்ச்சியாளர்கள் தான் நம்முடைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பதாகவும் அவர் கூறினார். அதோடு, உலகை மாற்றும் ஆராய்ச்சியாளராக ஐஐடி மாணவர்கள் செயல்பட்டு வருவதாகவும், மாணவர்கள் தங்களின் கண்டுப்பிடிப்பு சமூகத்திற்கு என்ன செய்யப்போகிறது என்று சிந்தித்து செயலாற்றுங்கள் என்று அறிவுறுத்தினார்.
சட்டத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி பெரிய அளவில் இல்லை என்றும்; அதே நேரத்தில், நம்முடைய சட்டமானது சுதந்திரம், சமூகநீதி ஆகியவற்றை உயர்த்திப் பிடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஓபன்ஹைமர் திரைப்படம் வெளியானது. "அணுகுண்டின் தந்தை" (Father of the Atomic bomb) எனப்படும் ராபர்ட் ஓபன்ஹைமர் (J. Robert Oppenheimer) வடிவமைத்த அணுகுண்டின் தாக்கம் மற்றும் அதன் சவால்களை பற்றி கூறப்படுள்ளது. அது ஆபத்து என்றாலும் அதனை எழுதும் முறையை அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர், 'நவீன தொழில்நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயனளிக்க வேண்டும். வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில்நுட்பமும் முக்கியப் பங்கு வகிக்கும். காணொலி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல, செயற்கை நுண்ணறிவு (AI - Artificial intelligence) தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கணினியால் எழுத முடிகிறது, வரைய முடிகிறது, செய்திகளை அனுப்ப முடிகிறது.
செயற்கை நுண்ணறிவுகள் நாம் கொடுக்கப்படும் உள்ளீடுகள் அடிப்படையில் செயல்படுவதால் அது ஒரு சார்பாக இருக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. இதன் மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களால் ஏற்படும் ஆபத்து ஏற்படுத்தக்கூடும்' எனத் தெரிவித்தார்.
ஐஐடி நிர்வாகக் குழு தலைவர் பவன் கோயங்கா, இயக்குநர் வி.காமகோடி, பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் உருவப்படத்தை அகற்றுக - பதிவுத்துறை அறிவிப்பு!