சென்னை: கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் அகிலன். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், தான்யா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். வரும் 10ம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் ஜெயம் ரவியின் 20 ஆண்டு திரைப் பயண கொண்டாட்டம் சென்னை வடபழனியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் மோகன் ராஜா, ஏ.எல்.விஜய், ராஜேஷ், பிரதீப் ரங்கநாதன், நடிகர் வி.டி.வி கணேஷ், நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரியா பவானி சங்கர் பேசுகையில், "அகிலன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கும் எனக்கும் சண்டைதான் இருக்கும். இசையமைப்பாளர் சாம்.சி.எஸின் எல்லா பாடல்களும் பிடிக்கும். கதாபாத்திரத்துக்கு தேவையான ஈடுபாட்டை ஜெயம் ரவி செலுத்தியிருக்கிறார்" என்றார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசும்போது, "ஜெயம் ரவியுடன் பணியாற்றுவது மிகவும் பிடிக்கும். 'அடங்கமறு' படத்துக்கு பின் இந்த படத்தில் வேலை பார்க்கிறோம். இப்படத்துக்கு 3 பாடல்களை உருவாக்கினோம். ஆனால் கதைக்களத்துக்கு ஏற்ப 2 பாடல்களே வைக்கப்பட்டுள்ளன. துறைமுகத்தில் நடக்கும் விஷயங்களை எந்த படமும் கூறியதில்லை. இதான் முதல் படம் என நினைக்கிறேன். இந்த படத்தில் நிறைய மாஸ் காட்சிகள் உள்ளன. இந்த படத்தில் யார் நல்லவன், யார் கெட்டவன் என்பது போக போகத்தான் தெரியும்" என கூறினார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் மோகன் ராஜா, "20 ஆண்டுகளாக பார்க்காத என் தம்பியை தற்போது புதுவிதமாக பார்க்கிறேன். இப்படி ஒரு அதிரடி படத்தை பண்ணவில்லை என எனக்கே பொறாமையாக உள்ளது. ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததால் தான், தனி ஒருவன்-2 தள்ளிப்போனது. இப்படம் குறித்த அறிவிப்பு 2024ம் ஆண்டு வெளியாகும்" என குறிப்பிட்டார்.
விழாவில் பேசிய இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், "அகிலன் டிரெய்லர் பார்த்து மிக உற்சாகமடைந்தேன். விசில் அடித்து சிரித்தேன். கோமாளி படம் முடிந்ததும் அடுத்த படத்துக்காக, ஜெயம் ரவியிடம் கதையை கூறினேன். அதற்கான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. தனி ஒருவன்-2 படத்துக்காக எத்தனை வருடங்கள் காத்திருந்தார்கள். அதற்கான காலமும் வரும்" என கூறினார்.
இதையடுத்து பேசிய நடிகர் ஜெயம் ரவி, "என் சினிமா வாழ்க்கையில் 20 ஆண்டுகள் எப்படி போனது என்றே தெரியவில்லை. நல்ல படங்கள் தான் நடித்திருக்கிறேன் என்ற திருப்தி உள்ளது. அகிலன் படத்தில் இரட்டிப்பு கஷ்டம் இருக்கிறது. தனி ஒருவன்-2 படத்துக்காக நானும் காத்திருக்கிறேன். அகிலன் படத்தை பொறுத்தவரை பசி தான், அடிப்படையான விஷயம். இயக்குநர் ஜனநாதன் எப்போதும் எங்களுடனே இருக்கிறார். இந்த 20 ஆண்டுகளை திரும்பி பார்க்காமல், பயத்தில் முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன்" என கூறினார்.
இதையும் படிங்க: கன்னட படத்தில் அறிமுகமாகும் WWE சாம்பியன் தி கிரேட் காளி