சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏழாயிரத்து 255 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர். இதில் இரண்டாயிரத்து 743 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலுக்குப் பின்பும், இணையதளத்திலும் நேடியாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதனால் ஆறு கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 பேராக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது ஆறு கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் புதிதாக இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 66 பேர் இணைந்துள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 231.63 கோடி ரூபாய், பொருள்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
சிவிஜில் செயலி மூலமாக 1971 புகார்கள் பெறப்பட்டன. இதில் 1,368 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர், கோவை, சென்னை, நாமக்கல் மாவட்டங்களில்தான் அதிகப்படியான புகார்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
இதுவரை உரிமம் பெற்ற 18 ஆயிரத்து 712 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மார்ச் 31ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வீடு தேடி வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், வாக்குச்சாவடிகளுக்குச் சென்ற வாக்களிக்கப் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாக, கவச உடையுடன் அவர்கள் வாக்களிக்கலாம். வாக்குப்பதிவு கலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெங்களூருவிலிருந்து கடத்திவரப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்!