சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம் பேசுகையில், "வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் மூலம் 1.87 கோடி வாக்காளர்கள் திருத்தம் செய்துள்ளனர், அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 86 விழுக்காடு வாக்காளர்கள் சரிபார்த்துள்ளனர். குறைந்தபட்சமாக சென்னையில் உள்ள மொத்த வாக்காளர்களில் எட்டு விழுக்காட்டினர் சரிபார்த்துள்ளனர்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் இதுவரை மொத்தம் 91.42 லட்சம் மதிப்புள்ள பணம், நகை, பரிசுப்பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 48.12 லட்சம் பணம், 25 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 22 ஆயிரத்து 847 லிட்டர் மதுபானம், 13.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டியில் சீமான் பேசியது குறித்து விழுப்புரம் மாவட்டத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. சீமான் மீது காங்கிரஸ் கட்சி அளித்துள்ள புகாரை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளேன். விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் சீமான் பேச்சு தொடர்பாக விசாரித்து அறிக்கை தர உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்" என்றார்.