சென்னை: பெங்களூர் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தான் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக அவர் அறிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை அமைதி காத்த சசிகலா, தற்போது தொடர்ந்து தொண்டர்களிடம் பேசிவருகிறார். இதுவரை சசிகலா தொண்டர்களுடன் பேசிய 100க்கும் மேற்பட்ட ஆடியோ உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
'எம்ஜிஆருக்கு யோசனை சொல்லியிருக்கேன்'
இந்நிலையில் நேற்று தொண்டர் ஒருவரிடம் அவர் பேசிய ஆடியோ வெளியானது. அதில் அவர், "ஜெயலலிதாவுடன் மட்டுமல்ல, எம்ஜிஆரோடும் சேர்ந்து நான் பயணித்திருக்கிறேன். இது நிறைய பேருக்கு தெரியாது. கட்சி விஷயமா நிறைய கருத்துகளை என்னிடம் அவர் கேட்டிருக்கிறார்" என்று தெரிவித்திருந்திருந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் இதை விமர்சித்து கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் இன்று புதிய ஆடியோ ரிலீஸ் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், "நீர் அடித்து நீர் விலகாது. எம்ஜிஆர் வழியில் பயணிக்க விரும்புகிறேன். அனைத்தையும் விரைவில் சரி செய்து விடுவேன்.
ஊரடங்கு முடிந்தவுடன் சுற்றுப்பயணம்
ஊரடங்கு முடிந்தவுடன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். ஜூலை 5க்கு பிறகு என்ன செய்கிறார்கள் என்று பார்த்துவிட்டு பயணத்தை ஆரம்பிக்கிறேன். அனைவரும் பார்த்து வியக்கும்படி எனது செயல்பாடு இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுக தலைமை உத்தரவின்பேரில் சசிகலாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் தீர்மானங்களை நிறைவேற்றிவருகின்றனர். மேலும் சசிகலாவுடன் செல்போனில் பேசிய பலரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து சசிகலா தொண்டர்களிடையே உரையாடி வருகிறார்.
இதையும் படிங்க: சசிகலா உட்பட 501 பேர் மீது வழக்குப்பதிவு - முன்னாள் அமைச்சர் கொடுத்தப் புகாரில் நடவடிக்கை