2014ஆம் ஆண்டு டெல்லியில் வழக்கறிஞராக உள்ள எஸ்.கே. சாமி என்பவர் அண்ணா சாலையில் உள்ள சரவணபவன் உணவகத்தில் உணவு ஆர்டர் செய்தார். இதையடுத்து, வந்த உணவில் முடி இருந்ததாகக் கிளை மேலாளரிடம் புகார் தெரிவித்தார்.
பின்னர், புதிதாக வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் வயிற்று வலி, வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சாமி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மன உளைச்சலுக்கும் உடல்நிலை பாதிப்புக்கும் காரணமான சரவணபவன் உணவகம் 90 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணையில் ஆதாரங்களுடன் கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டதை மனுதாரர் தரப்பு உறுதிபடுத்தியுள்ளது.
இந்த அடிப்படையில் வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாகவும், வழக்கு செலவாக 10 ஆயிரம் ரூபாயுடன் 9 விழுக்காடு வட்டியையும் சேர்த்து நான்கு வாரத்தில் மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.