ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து ஜூலை 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என அவருக்கு உத்தரவிட்டது.
ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி அவர் சரணடைய காலஅவகாசம் கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுப்படி செய்த நிலையில், ஜூலை 9ஆம் தேதி சென்னை நான்காவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ராஜகோபால் உடல்நிலை சரியில்லாமல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து ராஜகோபாலின் மகன் சரவணன், ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதியில்லாததால், தனது தந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதி ராஜகோபால், உடல்நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவர்கள் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில் ராஜகோபாலின் உடல்நிலை சீராக இல்லை என தெரிவிக்கப்பட்டதையடுத்து. அவரை தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.