திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவஜோதி. இவரின் தந்தை சென்னையில் உள்ள சரவணபவனில் வேலை செய்து வந்தார். ஜீவஜோதி தனது உறவினர் பிரின்ஸ் சாந்தகுமாரை காதல் திருமணம் செய்துகொண்டு பெற்றோருடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தார். இப்படி இருக்கையில் தனது ஓட்டலில் வேலை செய்யும் ஊழியரின் மகளான ஜீவஜோதியை 3ஆவதாக திருமணம் செய்து கொள்ள ராஜகோபால் விரும்பியுள்ளார்.
இந்நிலையில், 2001ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார், கொடைக்கானல் பெருமாள்மலை பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து வேளச்சேரி காவல்துறையினர் ராஜகோபால் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 2004ஆம் ஆண்டு, ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும், ரூ.55 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது. ராஜகோபாலை தவிர கொலை வழக்கில் தொடர்புடைய எட்டு பேருக்கு ஓன்பது ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த அமர்வு 2009ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில், "கொலைக்குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தெளிவான நோக்கத்துடன் பயங்கர குற்றத்தை குற்றவாளிகள் செய்துள்ளனர். எனவே, ராஜகோபால், ஜனார்த்தன், டேனியல், தமிழ்செல்வன், கார்மேகம் ஆகிய ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது" என குறிப்பிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2009ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதிகள் என்.வி.ரமணா, மோகன் எம்.சாந்தன கவுடர், இந்திரா பானர்ஜி கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இவர்கள் அளித்த தீர்ப்பில், "எந்த வித சந்தேகத்துக்கும் இடமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. பழனியில் உள்ள பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தியதில் இருந்து கொடைக்கானல் மலைக்கு சென்றது வரை சாட்சியங்கள் தெளிவாக உள்ளது. எனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பான ஆயுள் தண்டனை குற்றம்சாட்டபட்டவர்களுக்கு உறுதி செய்யப்படுகிறது. தண்டனை விதிக்கப்பட்ட ராஜகோபால் உட்பட ஆறு பேரும் ஜூலை 7ஆம் தேதிக்குள் தொடர்புடைய நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்" என குறிப்பிடப்பட்டது.
எனவே , ஜுலை 7ஆம் தேதியான நாளை ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட பிணை முடிவடைவதால் அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.