சென்னை: கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு நடத்தி வரக்கூடிய மணல் குவாரி மற்றும் அதன் உரிமையாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்டோருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அரசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட குவாரிகளில் மணல் எடுக்கப்பட்டு சட்ட விரோதமாக அதன் வருவாய் மறைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, மேலும் வழக்கு ஒன்று பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது. மேலும் இது தொடர்பாக பல்வேறு கட்டங்களாக குவாரிகளில் ஆய்வு செய்து ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றி அது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
மேலும் இது தொடர்பாக பல்வேறு விவரங்களைத் திரட்டி உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் நீர்வள ஆதாரத்துறையின் தலைமை பொறியாளர் முத்தையாவிற்குச் சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி நேற்று அவர் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் 10 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று மீண்டும் இரண்டாவது நாளாக முத்தையா விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
நேற்று மணல் குவாரி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அது தொடர்பான ஆவணங்கள் கேட்டதால் அதற்கு உண்டான ஆவணங்களை முத்தையா விசாரணைக்கு எடுத்து வந்துள்ளார். மேலும் இந்த மணல் குவாரி விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை செய்து அவர் அளிக்கக்கூடிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர்பு உள்ளவர்களுக்குச் சம்மன் அனுப்பி அவர்களையும் விசாரணைக்கு அழைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு! மாற்று தேதி அறிவிப்பு