. சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்கவும், ஒரே நிறுவனத்திடம் மணல் செல்வதால் ஏற்படும் மணல் தட்டுப்பாடு மற்றும் விநியோகத் தடையை சரி செய்யவும் மத்திய அரசாங்கத்தால் வகுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்களை மாநில அரசாங்கம் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.
. மணல் குவாரிக்கான ஆற்றுப் படுகையை தேர்வு செய்யும்போது அவை பருவ காலத்தில் நீரோட்டத்தை தடுத்து வெள்ளத்தை ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்வது அவசியம். அதற்கேற்ப அங்கு போதிய மணல் உள்ளதா என்பதை ஆராய வேண்டும்.
. மணல் குவாரிக்கான ஆற்றுப் படுகை மணல் அள்ள உகந்ததா என்பதை பெயர்பெற்ற கல்வி நிறுவனங்களில் பயின்ற வல்லுநர்களைக் கொண்டு ஆராய வேண்டும். சுற்றுச்சூழல் அம்சங்கள், நிலத்தடி நீர் மற்றும் நீர் கிடைப்பதை மணல் குவாரி அமைப்பது பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.
. மணல் குவாரி அமைப்பதற்கான ஆய்வுகள் நிறைவடைந்து, அதற்கான இடத்தை தேர்வு செய்த பின்னர், மணல் அள்ளப்படும் இடத்திற்கான நில வரையறை திட்டத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதலுக்காக சமர்பிக்க வேண்டும்.
. மணல் குவாரி அமைப்பது தொடர்பாக வருவாய் துறை அலுவலர், துணை ஆட்சியர் உள்ளிட்டோர் கூட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
. மணல் குவாரி அமைக்கும் இடத்திற்கு ஒப்புதல் அளிக்கும் முன்பு நிர்வாக பொறியாளர், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஒப்புதல் வழங்குவதற்கான காரணிகள் சரியாக இருக்கிறதா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
. ஆட்சேபனையில்லா சான்றிதழ் (NOC) அளிக்கும் முன்பு வருவாய்த் துறை அலுவலர்கள், மணல் குவாரி அமைப்பதற்கான குறிப்பிட்ட நிலப்பரப்பின் வருவாய் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.
. மணல் குவாரி அமைப்பதற்கான இடத்துக்கு குறிப்பிட்ட தொலைவில் குடிநீர் திட்டங்கள் எதுவும் செயல்பாட்டில் உள்ளதா என்பதை குடிநீர் வடிகால் வாரியம் கவனிக்க வேண்டும்.
. வருவாய் துறை, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சுரங்கத் துறை அலுவலர்களின் கூட்டு ஆய்வு அறிக்கையின் அடிப்படையிலேயே மணல் குவாரிக்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
. கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய அங்கீகார வாரியம் (NABET) பரிந்துரை செய்த ஆலோசகர் தயாரித்த சுரங்க திட்டத்தை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணைத் தலைவரிடம் நிர்வாக பொறியாளரும் பொதுப்பணித் துறையும் சமர்பிக்க வேண்டும்.
. மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்தின் ( SEIAA) கீழுள்ள மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு (SEAC), சுரங்கம், சுற்றுச்சூழல், சமூகவியல் உள்ளிட்ட துறைகள் சார்ந்த நிபுணர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் மணல் குவாரி அள்ளுவதற்கான குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்தபின் SEIAA ஒப்புதலுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
. SEAC பரிந்துரை மற்றும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு SEIAA குறிப்பிட்ட இடத்தில் மணல் குவாரி அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பில்லை என்பதை தெளிவு செய்ய வேண்டும். இதை பொதுமக்களுக்கு தெரிவிக்க மாவட்டத்தில் அதிகம் விற்பனையாகும் செய்தித்தாளில் இதுதொடர்பாக விளம்பரம் செய்ய வேண்டும். இதனை SEIAA சுற்றுச்சூழல் பாதிப்பில்லை என அறிவித்த 7 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும்.
. மணல் குவாரி அமைப்பதால் எந்த சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள திட்டத்தை அமைப்பதற்கான அலுவலரை அணுகலாம். பின்னர் மணல் குவாரி அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்படும். பயோ-டாய்லர், பயோ-ரோடுகள் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நீர் மற்று காற்று பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதன்பிறகு மணல் குவாரி அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் சிவப்பு கொடிகளை அமைத்த பின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திலுள்ள அதிகாரி (CTO) பணிகளைத் தொடங்க அனுமதி அளிப்பார்.
. சிடிஓவின் அனுமதியை அடிப்படையாக வைத்து மாவட்ட ஆட்சியரிடம் குவாரியை செயல்படுத்தச் சொல்லி நிர்வாக பொறியாளர், பொதுப்பணித் துறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்படும். பின்னர் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், தாசில்தார், காவல் துறை ஆய்வாளர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை, போக்குவரத்து மற்றும் வனத் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களின் மூலம் மணல் குவாரி அமைக்கப்படும் இடத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு. புதிய மணல் குவாரி இயங்க அனுமதி அளிப்பார்.
. மணல் குவாரி இயங்க அனுமதி கிடைத்த பின்பு சில விதிமுறைகள் உண்டு. மணல் கொட்டும் இடம், அள்ளும் இடத்திலிருந்து குறைந்தது 25 கிமீ தூரம் தள்ளி இருக்க வேண்டும். அது 10 - 15 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தத்துக்கான வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மணல் கொட்டும் இடத்தால் போக்குவரத்து இடைஞ்சல்கள் இருக்கக் கூடாது.
. அதேபோல் சிசிடிவி கேமராவின் உதவி மூலம் மணல் அள்ளுவதற்கு உள்ளே வரும் வாகனங்கள் மற்றும் வெளியே செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
. எக்காரணத்தைக் கொண்டும் குண்டு வைத்து தகர்க்கும் செயலில் ஈடுபடக்கூடாது.
. உயர் நீதிமன்றம் நியமத்துள்ள கண்காணிப்புக் குழு, மணல் குவாரிகளை சரியான கால இடைவெளிகளில் ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.
. சட்ட விதிகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட அளவு மணல் எடுத்த பின்பு மணல் குவாரி மூடப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
. மணல் குவாரி மூடம்படும்போது ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி மீட்புப் பணிகளை முடித்திட வேண்டும். இதனை பொதுப்பணித் துறை சரிவர கண்காணிக்க வேண்டும். அதேபோல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட அளவு மணல் மட்டும்தான் அள்ளப்பட்டதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
. மணல் குவாரி பணிகளுக்காக அமைக்கப்பட்ட கூடாரங்கள், சாலைகள் உள்ளிட்டவற்றை அகற்றி பழைய நிலைக்கு அப்பகுதியை மாற்ற வேண்டும். ஆற்றின் நீரோட்டத்துக்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது.
. இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் பொதுப்பணித் துறை பாதுகாக்க வேண்டும். எதிர்காலத்தில் அது சான்றாதாரமாக பயன்படும்.
மணல் குவாரி தொடங்கப்பட்டு, இயங்குதல் முதல் ஒப்பந்தம் முடிவு காலம் வரை இவை அனைத்தும் சரிவர பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.