கோடைக் காலம் வந்துவிட்டாலே வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு தங்களது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள எல்லோரும் விரும்புவது வழக்கமான ஒன்றுதான். கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து மருத்துவ ரீதியான பிரச்சினையும் ஏற்படும்.
இந்த நாள்களில் மக்கள் தங்கள் உடலை சீராக வைத்துக் கொள்ளவேண்டும் என எண்ணினாலே பருவகால பழங்கள் மற்றும் பழரசங்கள் ஆகியவைதான் நினைவுக்கு வரும். இதனால் மக்கள் தங்களது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தைப் பெற உதவும் சில பழங்களை மதிய நேரங்களில் எடுத்துக்கொள்வதுண்டு.
இதனால் சென்னை நகரத்தில் பெரும்பாலான பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் குளிர்பானங்கள் குறிப்பாக இளநீர், தர்பூசணி, வெள்ளரி, மோர் மற்றும் கரும்பு சாறுகள் உள்ளிட்டவற்றை அதிகளவில் விற்பனை செய்து வருகிறார்கள். வியாபாரிகள் வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகளில் வாங்கி வந்து சாலையோரங்களில் பழங்களை குவித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்கள் கோடைக்காலம் தொடங்கும் முன்பே இந்தப் பழங்களை வாங்கி இருப்பு வைத்து தற்போது விற்பனையை விறுவிறுப்பாக நடத்தி வருவதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்றால் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் விற்பனையின்றி அவர்களது வாழ்வாதாரம் பெரும் பாதிப்படைந்தது எனக் கூறிய வியாபாரிகள் இந்த ஆண்டு நல்ல விற்பனையை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிகிறது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தர்பூசணி கடையில் இருந்து நம்மிடம் பேசிய யோகேஷ், "நான் கோடைக் காலங்களில் தினந்தோறும் தர்பூசணி விற்கும் கடைக்கு சென்று பழத்தை எடுத்து கொள்வது வழக்கம். தர்பூசணி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள இந்த பழம் உதவுவதால் வெயில் காலங்களில் இதை அதிகம் விரும்புவேன்" என்றார்.
மற்றொரு வாடிக்கையாளராக வெங்கடேசன் கூறுகையில், "பொதுவாக வெயில் காலங்களில் பழங்கள் அல்லது பழரசங்கள் தின்தோறும் எடுத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் தர்பூசணி, கரும்பு சாறு, இளநீர் உள்ளிட்ட வகைகளை எடுத்து கொள்கிறேன் என கூறிய அவர் தனது இருசக்கர வாகனத்தில் நகரத்தை சுற்றும் போது எங்கேயெல்லாம் இந்தப் பழங்கள் விற்கப்படுகிறதோ அங்கேயே தனது வாகனத்தை நிறுத்தி அவற்றை அருந்துவதாகக்" கூறினார்.
இதே போல வினோத் தர்பூசணி மற்றும் முலாம்பழம் வியாபாரி கூறுகையில், "கரோனா பெருந்தொற்றால் கடந்த வருடம் பழக்கடை நடத்தமுடியவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வியாபாரம் தற்போது சுமாராக இருந்தாலும் வரும் நாட்களில் அதிக விற்பனையை எதிர் நோக்கியுள்ளேன்ன்" என்றார். மேலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பழங்களின் விலை இந்த வருடம் சற்று உயந்திருக்கிறது எனவும் வருத்தம் தெரிவித்தார்.
வெயிலின் தாக்கத்தை உணர்ந்து நகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் கரும்பு சாறு, இளநீர், மோர், ராகி உள்ளிட்ட வெவ்வேறு குளிர்ப்பதானங்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது. வெப்பத்தின் தன்மை அதிகமாக இருப்பதால் இரு சக்கரம் மற்றும் கார்களில் செல்வோர் ஆங்காங்கே நின்று இந்த கோடை கால பழ உணவுகளை எடுத்துக்கொண்டு தங்களையே இளைப்பாற்றி கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடை காலங்களில் மக்கள் தங்களது ஆரோக்கிய உடல் நலத்திற்கு போதிய நீர்ச்சத்து மற்றும் ஆற்றல் தேவைப்படுகிறது. தர்பூசணி, எலுமிச்சை மற்றும் இளநீர் போன்ற இயற்கை உணவுகள் கோடை காலத்தில் குளிர்ச்சியை தருவதோடு உடலிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் தருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.