ஈரோடு: வியாபாரி முருகேசன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்(எஸ்எஸ்ஐ) பெரியசாமியிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக, மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர்(ஐஜி) ஆர்.சுதாகர் தெரிவித்தார்.
மாவட்ட காவல் அலுவலகத்தில், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் ஆர்.சுதாகர், கோவை சரக காவல்துறைத் துணை தலைவர் முத்துசாமி ஆகியோர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில், காவல்துறை மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து, 'காக்கும் கரங்கள்' என்ற குழுவினைத் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து இத்திட்டத்தின் மூலம் குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, '1098 என்ற எண்ணையும், 9655220100' வாட்ஸ் ஆப் எண்ணையும் அறிமுகப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஐஜி சுதாகர்," இதுவரை ஈரோட்டில் 14 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளோம்.
குழந்தை திருமணங்களால் சம்மந்தப்பட்ட குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் எடுத்துரைக்க காக்கும் கரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில், 128 'ஹாட் ஸ்பாட்கள்' கண்டறியப்பட்டு, 34 வட்டாரங்களில் காவல் துறை உட்பட சமூகம் அமைப்புகளின் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் வியாபாரி முருகேசன் கொலை வழக்கைப் பொறுத்த வரை காவலர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, உடனடியாக கைதும் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் தான் காரணமா என்ற கேள்விக்கு, "காவலர்களின் மன அழுத்தத்தைப் போக்க சுழற்சி முறையில் பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: போலீஸ் தாக்கியதலில் வியாபாரி மரணம்: சேலம் சரக டிஐஜி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு