சென்னை: இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் உடற்பயிற்சி, நடைபயிற்சி, மிதிவண்டி ஓட்டுதல் போன்ற பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் சார்ந்த பயிற்சிகளை ஊக்கப்படுத்தும்விதமாக சிங்காரச் சென்னை 2.0 வீதி விழா என்ற நிகழ்வின்கீழ் பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி பொதுமக்களை பங்கேற்க 2021 டிசம்பர் 31 அன்று அழைப்புவிடுக்கப்பட்டது.
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் இந்திய அளவில் இத்தகைய போட்டிகள் அறிவித்து நடத்தப்பட்டன. 75ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவைக் கொண்டாடும்விதமாக உடல் ஆரோக்கியம் சார்ந்த போட்டிகளில் இந்திய அளவில் 75 நகரங்களைச் சார்ந்த தலைவர்கள், பல்வேறு நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர்கள், ஆணையாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதில் இணையதளத்தின் வாயிலாகப் பதிவுசெய்த நபர்களின் நடைபயிற்சி, ஓடுதல், மிதிவண்டி ஓட்டுதல் போன்ற நிகழ்வுகள் இணையத்தின் வழியே கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளன.
நடைபயிற்சி, ஓடுதல், மிதிவண்டி ஓட்டுதல் போன்ற நிகழ்வுகளில் 75 நகரங்களில் உள்ள முக்கியத் தலைவர்களில் 297 தலைவர்களும், பல்வேறு நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர்கள், அரசு ஆணையாளர்கள் 56 நபர்களும் பதிவுசெய்தனர்.
மா. சுப்பிரமணியன் முதலிடம், ககன்தீப் சிங் பேடி 5ஆம் இடம்
நடைபயிற்சி, ஓடுதல், மிதிவண்டி ஓட்டுதல் ஆகிய சவால் போட்டிகளில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிவுசெய்து நகரங்களில் உள்ள அமைச்சர்கள், முதன்மைச் செயல் அலுவலர்கள், ஆணையாளர்களுக்கான நிகழ்வுகளில் ஓடுதல் சவால் போட்டியில் அதிக எண்ணிக்கையிலான செயல்பாடுகளில் 390 கிமீ ஓடி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நகரங்களில் உள்ள அமைச்சர்கள், முதன்மைச் செயல் அலுவலர்கள், ஆணையாளர்களுக்கான நிகழ்வுகளில் நடைபயிற்சி சவால் போட்டியில் அதிக எண்ணிக்கையிலான செயல்பாடுகளில் அரசு முதன்மைச் செயலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
சென்னை மாநகரைப் பொறுத்தவரையில் மிதிவண்டி ஓட்டுதல் சவாலில் அதிக அளவு கிலோ மீட்டர் அதாவது 72 ஆயிரத்து 458 கிமீ பதிவுசெய்து கலந்துகொண்ட நகரங்களிலேயே முதன்மையான இடத்தையும், மிதிவண்டி ஓட்டுதல் சவாலில் பதிவுசெய்தவர்களின் பட்டியலில் 1,059 நபர்கள் பதிவுசெய்து அதிலும் முதன்மையான இடத்தை சென்னை மாநகரம் பெற்றுள்ளது.
மேலும் நடைப்பயிற்சி சவாலில் அதிக கிலோமீட்டர் பதிவுசெய்த நகரங்களின் பட்டியலில் சென்னை மாநகரம் 21 ஆயிரத்து 860 கிலோ மீட்டர் பதிவுசெய்து இரண்டாமிடத்தையும், ஓடுதல் சவாலில் 403 கிலோ மீட்டர் பதிவுசெய்து இரண்டாமிடத்தையும், நடைபயிற்சி சவாலில் பதிவு செய்தவர்களின் பட்டியலில் 493 நபர்கள் பதிவு செய்து சென்னை மாநகரம் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கலந்தாய்வு நடத்தாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை: விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு