நடிகர் ரிச்சர்ட் ரிசி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் அக்டோபர் 1ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் 'ருத்ர தாண்டவம்'. இந்தப் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்தப் படம் கிறிஸ்தவர்களுக்கு எதிரானதாகவும், அவர்களைத் தவறாகச் சித்திரிக்கும் வகையிலும் இருப்பதாகக் கூறி சென்னை 15ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசிய தலைவர் சாம் யேசுதாஸ் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மேலும் அவர் தொடுத்த அந்த மனுவில், "மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம், காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சிறுபான்மை கிறிஸ்தவர்களைத் தவறாகச் சித்திரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளன. இதனால் இரு மதத்தினர் இடையே சண்டையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இது தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். அதுவரை படத்தை திரையரங்கு, ஓடிடி உள்ளிட்ட இணையதளத்தில் வெளியிடத் தடைவிதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் நாளைக்கு (செப்டம்பர் 30) பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: 'ருத்ர தாண்டவம்' திரைப்பட இயக்குநரைக் கைது செய்யக்கோரி புகார்!