தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயின்றுவருகின்றனர்.
அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் அல்லது அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவருக்கு செலவிடும் தொகை ஆகியவற்றில் எந்தத் தொகை குறைவோ, அந்தத் தொகையை தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்கிவருகிறது.
இந்நிலையில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயசந்திரன் நிர்ணயம் செய்திருந்த தொகையை அதிரடியாக குறைத்து தற்போதைய முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.
பழைய கட்டணம் | புதிய கட்டணம் |
---|---|
ரூ 25,385 | ரூ 11,719 |
ரூ 25,414 | ரூ 11,748 |
ரூ 25,613 | ரூ 11,944 |
ரூ 25,655 | ரூ 11,928 |
ரூ 25,622 | ரூ 11,928 |
தற்போதைய செலவுகளுக்கு ஏற்ப, கல்விக் கட்டணத்தை அதிகரித்து வழங்குவதற்கு பதிலாக கணிசமாக குறைத்து வழங்கிட பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்திருப்பது மாணவர்களையும், பெற்றோர்களையும் பாதிக்கச் செய்யும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.
மேலும், பல முன்னணி தனியார் பள்ளிகள், கல்விக் கட்டண குறைப்பால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்வதற்காக, பெற்றோரிடம் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதற்கு முயற்சித்துவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.