சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று 50 இடங்களில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகோரி ஆர்.எஸ்.எஸ். தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
ஆனால், சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உள்ளரங்கில் அணிவகுப்பை நடத்திக்கொள்ள ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் ஈரோடு மற்றும் திருவாரூரில் ஜனவரி 29ஆம் தேதி அல்லது வேறொரு தேதியில் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று(ஜன.30) விசாரணைக்கு வந்த போது, இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீட்டு வழக்கு தீர்ப்பு நிலுவையில் உள்ளதால், இந்த மனுக்கள் மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை வார்ரூம் ரகசியம் - காயத்ரி ரகுராம் பகீர் புகார்!