சென்னை: தமிழ்நாடு முழுவதும் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட ஆறு இடங்கள் தவிர 41 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பை நடத்திக் கொள்ள ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்து. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் மீண்டும் இன்று (ஜன. 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், கடந்த முறை நீதிமன்றம் தெரிவித்தபடி, ஜனவரி 29ஆம் தேதி அணிவகுப்பு நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை சுட்டிக்காட்டி அந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சுதந்திரமான முறையில் ஆர்எஸ்எஸ் சார்பில் காவல்துறையிடம் விண்ணப்பம் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
அந்த விண்ணப்பங்களை சுதந்திரமான முறையில் பரிசீலிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், இதே அணுகுமுறை தான் அனைத்து போராட்டங்களுக்கும் பின்பற்றப்படுகிறதா? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினர்.
பின்னர், ஆர்எஸ்எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதில்மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 6.20 கோடி வாக்காளர்கள்: இறுதி பட்டியலை வெளியிட்ட சாகு!