சென்னை: கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புறையின் போது திமுக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தது. தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்து இரண்டு ஆண்டுகள் முடிவடையவிருக்கும் நிலையில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பரப்புரையின் போதும் எதிர்கட்சிகள் மகளிர் உரிமைத் தொகை வழங்காதது குறித்து விமர்சித்தன. இந்நிலையில் தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் 2023 - 2024 நிதி ஆண்டிற்காக பட்ஜெட் தாக்கலுக்கு சட்டசபை கூடியதில் இருந்த மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்று மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளோம். அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என்றார்.
ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும் என நிதியமைச்சர் கூறினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி செயல்படுத்தப்படும் என அறிவித்த நிதியமைச்சர், அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல் இத்திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்படும் என கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் மகளிரை பயனாளிகளாக இணைப்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார். தமிழ்நாட்டு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் இத்திட்டம் புரட்சியை ஏற்படுத்தும் என அறிவித்த நிதியமைச்சர் இதற்காக வரவு-செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் வெளியான வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் ஆண்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தேர்தல் வாக்குறுதியின் படி திமுக அறிவித்துள்ள இந்த அறிவிப்பு நாடாளுமன்றத் தேர்தலில் பலன் கொடுக்குமா என்பதை இன்னும் ஓராண்டு பொறுத்திருந்தால் பார்த்து விடலாம்.
இதையும் படிங்க: TN Budget 2023 : தமிழ் வளர்ச்சி, பண்பாட்டு துறைக்கான சிறப்பு அறிவிப்புகள்!