சென்னை: சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி பிரதான வருவாயாக உள்ளது. மொத்தமுள்ள 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டுக்கு 750 கோடி ரூபாய் என, ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வருவாய் மூலம் மாநகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார தூய்மை பணிகள், திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 1998இன் படி, சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய முதல் அரை நிதியாண்டுக்கான சொத்துவரியை செப்.30க்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கான முக்கிய வருவாய் இனங்களில் சொத்து வரி பெரும் பங்கினை வகிக்கிறது.
இந்நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட சொத்து வரி ரூ.769.62 கோடி ஆகும். இவற்றில் ரூ.321 கோடி இணையதளம் மூலமாக 4.77 லட்சம் எண்ணிக்கையிலான சொத்து உரிமையாளர்கள் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. சொத்து வரியினை பொதுமக்கள் எளிதாக செலுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் சேவை மூலம் நினைவூட்டல் மற்றும் வரி பணம் செலுத்துவதற்கான இணையதள லிங்க்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியினை அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும்.
மேலும் முதல் அரையாண்டு சொத்து வரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள்ளாகவும், இரண்டாம் அரையாண்டு சொத்து வரியினை அக்டோபர் 30ஆம் தேதிக்குள்ளாகவும் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 5 சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் முறையை பயன்படுத்தவும்: வரி வசூலிப்பாளர்களின் மூலமாக, Swiping வசதியுடன் கூடிய கையடக்கக் கருவி உதவியுடன், கிரெடிட், டெபிட் கார்டுகள் (Credit and Debit) மூலமாக செலுத்தலாம். மண்டலம்/வார்டு அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்களில் சொத்து வரி செலுத்தலாம். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஒப்பந்தம் இயற்றியுள்ள குறிப்பிட்ட வங்கிகளில், நேரடியாக பணமாக செலுத்தலாம்.
‘நம்ம சென்னை’ Mobile App மற்றும் ‘பேடிஎம்’ paytm Mobile App முதலிய கைப்பேசி செயலி மூலமாகவும்,
BBPS (Bharat Bill Payment System) என்ற சேவை மூலமாகவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் www.chennaicorporation.gov.in வாயிலாக, இணைய வழி செலுத்துதல் (Online payment) மூலமாகவும் பரிமாற்றக் கட்டணம் இல்லாமல் (Nil transaction fee) சொத்து வரி செலுத்தலாம் என்று பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2 ஆண்டுகளில் ரூ 12.56 கோடி மதிப்பிலான குட்கா, பான்மசாலா பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்