சென்னை: 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று (மார்ச். 18) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாயகராஜன் காகிதமற்ற பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர், "ஆண்டுக்கு ஐந்து லட்சம் இளைஞர்களை, படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்த முதலமைச்சரின் கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகள்அடையாளம் காணப்பட்டு, அவை ஊக்குவிக்கப்படும். மேலும், தொழில் நிறுவனங்களின் திறன் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு சிறப்புத் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
இதன் மூலம், மாணவர்களின் வேலை பெறும் திறன் (employability) பெருகும். இத்திட்டத்தைச் செயல்படுத்த, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலகமெங்கும் பல நாடுகளில் விஞ்ஞானிகளாக, பேராசிரியர்களாக, தொழில் நிபுணர்களாக தமிழர்கள் தங்களது துறையில் சாதனை புரிகிறார்கள்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஆராய்ச்சித் திறனை உயர்த்துதல், மாணவர்களுக்கு வழிகாட்டுதல், வளர்ந்து வரும் துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல் போன்றவற்றை இவர்களுடன் இணைந்து செயல்படுத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் பதிப்பிட ரூ.5 கோடி ஒதுக்கீடு!