சென்னை: சென்னையைச் சேர்ந்த இ-லேர்னிங் கல்வி நிறுவனம் அக்னைட்.
இந்நிறுவனம் முன்னதாக டெலி டேடா இன்பர்மேடிக்ஸ் என்ற பெயரில் செயல்பட்டது. வேளச்சேரி - தாம்பரம் சாலை, அண்ணா சாலை க்ளப் ஹவுஸ் சாலை ஆகியப் பகுதிகளில் இதன் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிறுவனம் எஸ்பிஐ வங்கியில் சுமார் 310 கோடி ரூபாய் கடன் பெற்று பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இருந்துள்ளது.
இதனையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில், நிறுவனத் தலைவர் பாலசுப்பிரமணியன், இயக்குநர் பத்மநாபன் உள்ளிட்டோர் மீது பெங்களூரு சிபிஐ அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோன்று டெலி டேடா மெரைன் என்ற நிறுவனத்தின் பெயரிலும், எஸ்பிஐ வங்கியில் சுமார் 166 கோடி ரூபாய் அளவிலும் கடன்பெற்று மோசடி செய்தது தொடர்பாக சென்னை சிபிஐ அலுவலர்கள் மற்றொரு வழக்கைப் பதிவு செய்தனர்.
மொத்தமாக 479 கோடி ரூபாய் தொழில் மேம்பாட்டிற்காக கடன்பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதன் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக நிறுவன இயக்குநர்கள் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில் மோசடி பணத்தில் 5 எல்பிஜி சரக்கு கப்பல்கள், ஒரு ஆயில் டேங்கர் வாங்கியது, வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் முறைகேடு பணத்தில் ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்ததை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.
தற்போது இந்நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல்கள், முதலீடுகள், வங்கி வைப்புத் தொகைகள் என 269 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் மசோதாவை சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பிய தமிழ்நாடு ஆளுநர்