சென்னை: திருவொற்றியூரைச் சேர்ந்தவர் ஜி.எஸ். உத்தண்டராமன். இவர் தேமுதிக திருவள்ளூர் மாவட்ட துணைச் செயலாளராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரிடம் திருவொற்றியூர் காமராஜர் நகரில் 85 சென்ட் இடம் உள்ளதாக திருவொற்றியூர் எட்டாவது வட்ட அதிமுக செயலாளர் டோக்கியோ ஆர்.வி. மணியும், திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக அவைத்தலைவர் எஸ். முத்தையாவும் கூறியுள்ளனர்.
அவர்களிடம் உத்தண்டராமன் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான விலை பேசி 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முன்பணமாகக் கொடுத்துள்ளார். அதன்பின் ஆவணங்களைச் சரிபார்த்த அந்த இடம் தனியார் தொழிற்சாலைக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
இதனையடுத்து உத்தண்டராமன் முன்பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் திமுக, அதிமுக நிர்வாகிகள் பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதையடுத்து 2017ஆம் ஆண்டு திருவொற்றியூர் காவல் நிலையத்தில் உத்தண்டராமன் புகார் கொடுத்தார். புகார் சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பலமுறை சமாதான பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வு ஏற்படாததால் நீதிமன்றத்தை உத்தண்டராமன் அணுகினார். நீதிபதி சம்பந்தப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து திருவொற்றியூர் உதவி ஆணையர் முகமது நாசர், காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான காவல் துறையினர் இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கணவன் படுகொலை: மனைவி கைது!