பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அயனாவரம் ரவுடி சங்கரை ஆகஸ்ட் 21ஆம் தேதி காவல்துறையினர் பிடிக்கச் சென்றபோது, அவர் காவல்துறையினரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் தங்களை தற்காத்துக்கொள்ள காவல்துறையினர் சுட்டதில் சங்கர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணை கோரியும், மகன் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டியும் சங்கரின் தாய் கோவிந்தம்மாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பின்னர் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சங்கர் என்கவுன்ட்டர் வழக்கு குறித்த எழும்பூர் மாஜிஸ்திரேட், சிபிசிஐடி காவல்துறையின் விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 8) மீண்டும் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எழும்பூர் மாஜிஸ்திரேட் சிவசக்திவேல் கண்ணன் தனது அறிக்கையை நீதிமன்றத்திடம் தாக்கல் செய்தார். சிபிசிஐடி காவல்துறை தரப்பிலும் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி வழக்கை செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சங்கரின் உடற்கூறாய்வு அறிக்கையை மனுதாரர் தரப்புக்கு வழங்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க... ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் வழக்கு - காவல்துறைக்கு கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவு