சென்னை புளியந்தோப்பு டிம்மல்லஸ் சாலையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ரமேஷ்பாபு என்கிற நாய் ரமேஷ் (34). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் (செப்டம்பர் 7) இரவு 9 மணியளவில் பேசின்பிரிட்ஜ் குருசாமி நகர் மெயின் ரோடு, 5ஆவது தெரு அருகே நடந்து சென்றார்.
அப்போது அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் மற்றும் முகக் கவசம் அணிந்தபடி வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், ரமேஷை வழிமறித்து ஓட ஓட விரட்டியது. பின்னர், இந்த கும்பல் ரமேஷை சுற்றிநின்று சரமாரியாக வெட்டினர். இதில் பின்னந்தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ரமேஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் பேசின் பிரிட்ஜ் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ரவுடி சிவராஜின் கூட்டாளிகள் விஜி என்கிற விஜயக்குமார், கார்டன் சரத் உள்பட 5 பேர் கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட ரமேஷ் பாபு மீது கடந்த 2016ஆம் ஆண்டு புழல் காவங்கரை பகுதியில் ரவுடி சிவராஜை கொலை செய்த வழக்கு உள்ளது. மேலும் மூன்று கொலை முயற்சி வழக்கு உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், இந்த கொலை சம்பவம், ரவுடி சிவராஜின் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்துள்ளதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகள் விட்டு சென்ற இருசக்கர வாகனத்தை அடையாளமாக வைத்து சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக கல்லால் அடித்துக் கொலை செய்த நபர்கள் கைது - உறைய வைக்கும் சிசிடிவி காட்சி!