நமது அன்றாட வாழ்வை எளிமையாக மாற்ற அறிவியல் பெரிதும் உதவுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. துணிகளைத் துவைக்க சலவை இயந்திரம், காய்கறிகள், இறைச்சிகள், பழங்கள், சமையல் வகைகளை அதிகநாள் வைத்துப் பயன்படுத்த குளிர்சாதனப் பேட்டி, பாத்திரங்களைக் கழுவ இயந்திரம் போன்றவை தற்போதைய சமூகத்திற்கு அடிப்படைத் தேவையாக மாறியுள்ளது. வீட்டு வேலைகள் நமக்கு உடற்பயிற்சி என நம் முன்னோர்கள் கூறுவார்கள்.
ஆனால் தற்போது உடற்பயிற்சிக்கு கூட இயந்திரங்கள் வந்துள்ளன. இப்படி எல்லாவற்றிற்கும் இயந்திரம் இருக்கும்போது சுவையான சமையலுக்குச் சாத்தியமா? என்றால்... சாத்தியம் என்கிறார் சரவணன் சுந்தரமூர்த்தி.
சென்னையைச் சேர்ந்த சரவணன் சுந்தரமூர்த்தி, பல ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சிசெய்து முழுவதுமாக தானாக சமையல் செய்யும் ரோபோ செஃப் என்னும் தொழில்நுட்ப இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். இது முழுக்க முழுக்க இந்தியாவிலாயே தயாரிக்கப்பட்டது.
அறிவியல் வளர்ச்சியில் தற்போது அனைத்தும் சாத்தியம் என்பதை நம்மை வியக்கவைக்கும் வகையில், சென்னையைச் சேர்ந்த ரோபோட்டிக்ஸ் படித்த சுந்தரமூர்த்தி, தானாக சமையல் செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். அந்த ரோபோவிற்கு ரோபோ செஃப் எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
இதைப்பற்றி சுந்திரமூர்த்தி கூறுகையில், ''எந்தவொரு மனித உதவியும் இல்லாமல் 1000 பேர் வரை இந்த ரோபோவின் மூலம் சமையல் செய்யமுடியும். இந்த ரோபோவை வீடு, உணவகம் உள்ளிட்ட இரு இடங்களிலும் பயன்படுத்தும்விதமாக இரு மாடலை தயாரித்து உள்ளோம். இது மின்சாரம் மூலம் இயங்கக்கூடியது. இதனால் மிகவும் பாதுகாப்பான முறையில் சமையல் தயார் செய்யப்படும்.
இந்த ரோபோவை செயலி மூலம் இணைத்து, அதன்மூலம் சமையலைத் தயாரிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ மூலம் 600 வகையான சைவ, அசைவ உணவுகளைத் தயாரிக்க முடியும்.
வீட்டில் உபயோகிக்க தயாரிக்கப்பட்டுள்ள ரோபோ செஃப் ரூ.6 லட்சத்திற்கும் விடுதிகளில் பயன்படுத்தத் தயாரிக்கப்பட்டுள்ள ரோபோ செஃப் ரூ.45 லட்சத்திற்கும் விற்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் முதல் சோலார் கிச்சன்!