சென்னை சவுகார்பேட்டையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி அதிகாலை ஆந்திராவில் இருந்து நகை வாங்குவதற்காக வந்த நகை வியாபாரிகளான சுப்பாராவ் மற்றும் ரகுமான் ஆகிய இருவரிடமிருந்து ஒரு கும்பல் போலீஸ் எனக்கூறி, அவர்கள் கொண்டு வந்திருந்த ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.
இதுவரை இந்த கொள்ளைச் சம்பவத்தில் இம்ரான், இம்ராஸ், இல்தியாஸ், மும்தாஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மாதவன், இமானுவேல், அன்பரசன், ராஜேஷ், அசோக், பாஷா, பாஷாவின் 17வயது மனைவி என 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் இம்ரான் தான் முக்கிய குற்றவாளி என்பதும் கொள்ளை கும்பல் தலைவன் என்பதும் தெரியவந்தது.
இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு, சிபிசிஐடி, வேலூர், தஞ்சாவூர், விழுப்புரம், குடியாத்தம், தாம்பரம், கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் பணம் பறித்தல், வழிப்பறி, ஹவாலா ஆள்கடத்தல் உள்ளிட்ட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் வரை வழிப்பறி வழக்கு ஒன்றில் இம்ரான் சிறையில் இருந்துள்ளார். அங்கு இதேபோல போலீஸ் எனக்கூறி வழிப்பறி செய்த வழக்கில், சிறையில் இருக்கும் ஒருவர், வெள்ளிக்கிழமைதோறும் யானைக்கவுனி பகுதிக்கு ஜவுளி வாங்க பலரும் வருவார்கள் என இம்ரானுக்கு துப்பு கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில் தான் பிப்ரவரி 3ஆம் தேதி அதிகாலை ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரிகளான சுப்பாராவ் மற்றும் ரகுமான் ஆகியோரிடம் இருந்து ரூபாய் 1.40 கோடி பணத்தை போலீஸ் என கூறி கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையடித்த பணத்தில் இம்ரான் நேராக கோவாவுக்குச் சென்று அங்குள்ள சொகுசு விடுதியில் அனைவரையும் வெளியேற்றி, 13 மாடல் அழகிகளை புக் செய்து, விடிய விடிய நடனமாட வைத்தும் விலை உயர்ந்த மதுபானங்களை குடித்தும் ஜாலியாக இருந்துள்ளார்.
அதேபோல, கோவா பகுதியில் சொகுசு படகை வாடகைக்கு எடுத்து, அதில் வெளிநாட்டுப் பெண்களுடன் நடுக்கடலுக்குச் சென்றும் சந்தோஷமாக இருந்துள்ளார். இதேபோல கொள்ளையடித்த பணத்தில் ரூபாய் 25 லட்சம் பணத்தை சில தினங்களிலேயே செலவழித்துள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 15க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இம்ரான், அனைத்து வழக்குகளில் இருந்தும் தப்பிக்க கொள்ளையடித்த பணத்திலேயே BA;BL சட்டப்படிப்பை முடித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தான் கொள்ளையடித்த பணத்தில் வழக்கறிஞர்களுக்கு தனியாக தொகை ஒதுக்கி, தொடர்ந்து அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அந்த வகையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மாதவன் தற்போது சவுகார்பேட்டையில் நடந்த கொள்ளைச் சம்பவத்திற்கு திட்டமிட்டு கொடுத்ததும் இதற்கு முன் நடந்த கொள்ளைச் சம்பவங்களில் கொள்ளையர்களுக்கு உதவியாக இருந்ததும் தெரியவந்தது.
இந்த கொள்ளைச் சம்பவத்தின் தலைவனான இம்ரான் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடும்போது கீழே விழுந்து ஒரு கை முறிந்தது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் இதுவரை ரூ.75 லட்சம் பணம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 21 கிராம் தங்க நகை, கத்தி உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 70 லட்சம் பணம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றை போலீசார் இன்று காட்சிப்படுத்தினர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற மூன்று நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: டெண்டர் ஒதுக்க ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாகப் புகார் - பாஜக எம்எல்ஏ மகன் கைது!