ஆபரணங்களை பழங்காலத்திலிருந்தே தமிழர்கள் பயன்படுத்தி வந்த வரலாறுகளை காண முடிகிறது. சிந்து சமவெளி, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் மட்டுமல்லாமல் குமரி கண்டம் இருந்த காலத்திலும் மக்கள் ஆபரணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். தற்போது, ஆபரணங்களின் அடுத்தடுத்த வளர்ச்சியாக இன்றும் மாறாமல் இருப்பது தங்கம், வெள்ளி மற்றும் வைரங்கள் என்பதை பார்க்க முடிகிறது.
தங்களின் கவுரவத்திற்காகவும், பாரம்பரியத்திற்காகவும் அணிந்த காலங்கள் மாறி, ஆபரணங்கள் இருந்தால் மட்டுமே அவர்கள் இந்த உலகில் வாழ்ந்தவர்கள் அல்லது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்னும் நிலை வந்து விட்டது. காரணம் தங்கம் போன்ற ஆபரணங்களை வைத்திருப்போர் அவர்களின் பொருளாதார பாதிப்புகளை சரி செய்துகொள்ள அவற்றை வங்கிகளில் கொடுத்து பணமாக பெறுகின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை உயர்ந்து செல்வது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உலகளவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் சவரனுக்கு 33 ஆயிரம் வரை இருந்து வந்த தங்கத்தின் விலை கிடுகிடுவென 42 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.
தங்க விலையை யார் நிர்ணயிக்கிறார்கள், அதன் விலை ஏன் அதிகரிக்கிறது என்பது குறித்து தங்கத்தின் விலை ஏற்றம் மற்றும் இறக்க நிறுவனத்தின் கூட்டமைப்பின் செயலாளர் ( MJA ) Madras jeweler's Association, President ஜெயந்திலால் ஜலானி கூறியதாவது, "தங்கத்தின் விலையை மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்வதில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் தங்கத்தின் உற்பத்தியும் தற்போது இல்லை.
தங்கத்தின் விலையை நிர்ணயிப்பவர்கள் யார்?
லண்டன் மற்றும் அமெரிக்காவில் மட்டுமே தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதனடிப்படையில் தான் இங்கும் விற்பனை செய்யப்படுகிறது. கரோனா தொற்று காலத்தில் தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கான காரணத்தை தெளிவாக விளக்க முடியும். குறிப்பாக, பங்குச்சந்தைகள் முடங்கி விட்டன. பல வியாபாரங்களும் முடங்கியுள்ளன. இவற்றில் முதலீடு செய்தவர்கள் தங்களின் முதலீடுகளை தங்கத்தில் முதலீடு செய்ய முடிவெடுத்து விட்டார்கள்.
50 ஆயிரத்தை தொடும் தங்கம் விலை?
இது உலகம் முழுமையாக நடந்து வருகிறது. வங்கிகளில் இருக்கும் பணத்தை கூட தங்கமாக வாங்கி பத்திரப்படுத்தும் முடிவுக்கு பிற நாட்டினர் முடிவெடுத்ததை சொல்லலாம். அயல் நாடுகளின் அரசாங்கங்களே தங்கத்தை நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது. இதன் மூலம் தங்கத்தின் விலை உலக அரங்கில் அதிகரிக்கிறது. இது இன்னும் 50 ஆயிரத்தையும் தாண்டினாலும் ஆச்சரியமில்லை. தவிர கரோனா தொற்று பாதிப்பு என்பது அடுத்த 18 மாதங்களையும் கடக்கும் நிலை உள்ளதால் தங்கத்தின் விலை நிச்சயமாக குறைய வாய்ப்பில்லை" என்றார்.
டாலர்களால் உயரும் தங்கம் விலை
பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியதாவது, "தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று என்றால், உலகின் மிக முக்கிய நாடுகள் டாலர்களை கணக்கின்றி அச்சடிக்கின்றன. கட்டுப்பாடுகள் இல்லாமல் அச்சடிக்கும் பணத்தின் விளைவாலும் தங்கம் விலை அதிகரிக்கும். வெளிநாடுகளில் தங்களின் சேமிப்புகளை பாண்டுகளாகவும், டெபாசிட்களாகவும் வைத்திருந்த பொதுமக்கள் அவற்றை தங்கத்தில் முதலீடு செய்துள்ளனர். இன்னும் சில ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை" என்றார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவை தொடர்ந்து ஆந்திராவில் தீவிரமடையும் கரோனா