சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (நவ.29) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு நிலவுகிறது.
இதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கன மழையானது, நேற்று (நவ.29) இரவு வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
அந்த வகையில், வேளச்சேரி 175வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி சாலை, முன்னாள் இராணுவத்தினர் குடியிருப்பு, என்.எஸ்.கே.நகர், பெரியார் நகர், நேரு நகர், காமராஜர் தெரு உள்ளிட்ட சாலைகளில் முழங்கால் அளவிற்கு மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
இவ்வாறு சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் தற்போது வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் தவித்து வருகின்றனர். குறிப்பாக, சிலரது இருசக்கர வாகனங்கள் பழுதாகித் தள்ளிக் கொண்டு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. மேலும் சில வாகனங்களோ மழை நீரில் நகர முடியாமல் புகையைத் தள்ளிக் கொண்டு நிற்கின்றன.
அதேபோல் வேளச்சேரி 100 அடி சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவது, மரங்கள் விழுந்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சென்னை வேளச்சேரி 100 அடிச் சாலை, ராஜலட்சுமி நகர் 2வது பிரதான சாலை உள்ளிட்ட சாலைகளில் மழை நீர் முழங்கால் அளவிற்குத் தேங்கி நிற்பதால், பெரும் இக்கட்டான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், மழை நீர் உடன் கழிவு நீரும் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெருமளவு பாதித்துள்ளது.
இத்தகைய சூழலில், மழை நீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மாநகராட்சி ஊழியர்கள், மோட்டார்கள் வைத்து சாலைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய நீரை அப்புறப்படுத்தி, அடைப்புகளைச் சரி செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையை வெளுத்தெடுக்கும் மழை. .வெள்ளக்காடாக மாறிய சாலைகள்!