சென்னை: ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று (ஜன.26) குடியரசு தின விழாவின் நிறைவாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை.
இது தொடர்பாக கேட்டதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி அலுவலர்கள், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி அலுவலர்கள் எழுந்து நிற்காதது தொடர்பாக தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தொடர்ந்து பதிவு செய்தனர்.
மேலும் தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலர் எஸ்.எம். சாமி, தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அலுவலர்கள் எழுந்து நின்று மரியாதை தராதத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.