வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் தரைத்தளம் மூழ்கும் அளவுக்கு சூழ்ந்த வெள்ளம்; படகுகள் மூலம் மீட்கப்படும் மக்கள்! - வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை
Chennai Rain: வரதராஜபுரம், முடிச்சூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தரைத்தளம் மூழ்கும் அளவிற்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
Published : Dec 6, 2023, 9:29 AM IST
சென்னை: மிக்ஜாம் புயலினால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் தொடர்ந்து அதி கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்கள், சாலைகள், குடியிருப்புகள் அடுக்குமாடி கட்டிடம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாகின. மேலும் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரி நீர் வெளியேறியதால் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடைவிடாமல் இரண்டு நாளாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் முக்கிய சாலைகளில் இடுப்பளவிற்கு மழை நீர் தேங்கி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து விலகிச் சென்றதால் இன்று(டிச.5) காலை முதல் சென்னையில் பரவலாக மழை இல்லை. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் படிப்படியாக குறைந்து வருகின்றன சில இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் மின் மோட்டார் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை என்றாலே அதிகம் பாதிப்பு உள்ளாகும் மேற்கு தாம்பரத்தை ஒட்டிய முடிச்சூர், வரதராஜபுரம், மணிமங்கலம், PTC கோட்ரஸ், அமுதம் நகர், அஞ்சுகம் நகர் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் மழை நீருடன் சேர்ந்து அடையாறு ஆற்றில் இருந்து வெளியேறிய வெள்ளநீரும் புகுந்ததால் அப்பகுதியே தீவு போல் காட்சாளிக்கின்றன. குறிப்பாக முடிச்சூர், வரதராஜபுரம், ராயப்பநகர், அமுதம் நகர், பிடிசி கோட்டரஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 அடிக்கு மேல் வெள்ளம் சூழ்ந்துள்ளதோடு பல இடங்களில் வீட்டின் தரை தளம் மூழ்கி ஏரி போல் காட்சியளிக்கிறது.
அதனால் குடியிருப்புகளில் சிக்கியவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் படகுகள் மூலம் மீட்டு முகாம்களில் தங்கவைத்து வருகின்றனர். அதோடு வெள்ளத்தில் ஏராளமான கார்களும், மக்களின் உடமைகளும் அடித்து செல்லபட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்துள்ளது. மேலும் வரதராஜபுரம், ராயப்பா நகர் பகுதியில் சுமார் 10 அடி உயரத்திற்கு சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனால் அப்பகுதியில் வெளியேற முடியாமல் வீட்டின் மேல் தளத்தில் நின்று மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அந்தப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில், கல்பாக்கம் சட்ராஸ் குப்பம் பகுதியைச் சேர்ந்த 60 மீனவர்கள் 10 சிறிய ரகம் மற்றும் 5 இயந்திர படகுகள் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் 200க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதோடு வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அமுதம் நகர், சுங்கசாவடி போன்ற பல இடங்களில் ஆங்காங்கே சுமார் 3 அடிக்கு வெள்ளம் ஓடுவதால் இச்சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யபட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகளுக்கு செல்லகூடிய ஏராளமான லாரிகள் சாலையின் ஓரங்களில் நிருத்தி வைக்கபட்டிருப்பதோடு, பொதுமக்களும் மாற்று வழி தெரியாமல் ஆங்காங்கே நின்று கடும் அவதிக்குள்ளாகி வருன்றனர்.
இதையும் படிங்க: 2015 Vs 2023 மழையில் என்ன வித்தியாசம்? ரூ.4000 கோடி தந்த பலன் என்ன?