தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான 13ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. எனவே, 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் முதல்கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி தலைமையில் குரோம்பேட்டை போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் 8 போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதிய உயர்வு, பல்வேறு படிகள், பணி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
கூட்டத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர், செயலர் இளங்கோவன், குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள், தொ.மு.ச, அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, உள்ளிட்ட 67 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
முன்னதாக, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கவில்லையெனில் ஜனவரி 6ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்குவோம் என தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
இதனால், பேச்சுவார்த்தைக்கு ஒருநாள் முன்னதாக உறுப்பினர்களுக்கு தெரிவித்தது மட்டுமின்றி, அவர்கள் அமர்வதற்கு ஏற்ப எவ்வித இட வசதியையும் ஏற்படுத்தாமல் இருந்ததாகவும் குற்றஞ்சாட்டினர்.
இதற்கிடையில், போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கைகளை அத்துறையின் அமைச்சர், செயலாளர்கள் பரிசீலித்த பிறகு அதற்கான முடிவுகள் எட்டப்பட்டு, ஊதிய உடன்படிக்கை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு!