சென்னை: நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 2007 முதல் 2009ஆம் ஆண்டு வரை வருமான வரியை மதிப்பீடு செய்து, 2011ஆம் ஆண்டு ரூ.3 கோடி மதிப்புள்ள வரியை செலுத்த உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் சூர்யா தரப்பிலும், வருமான வரி தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வருமான வரித்துறை மதிப்பீடு
இந்த வழக்குகளை விசாரித்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், நடிகர் சூர்யா 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமான வரித்துறை மதிப்பீட்டு அலுவலர்களின் உத்தரவை உறுதி செய்தது.
வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்
தீர்ப்பாயத்தில் தனது வழக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரிக்குச் சட்டப்படி மாதம் 1 விழுக்காடு வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி, 2018ஆம் ஆண்டு நடிகர் சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
தான் முறையாக வரி செலுத்தி வருகிறேன். தீர்ப்பாய கால தாமதத்துக்கு வருமான வரித்துறையே காரணம். வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்கு பெற தனக்கு உரிமை உள்ளது என அந்த மனுவில் சூர்யா தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறை தரப்பில் வாதம்
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று (ஆக.17) விசாரணைக்கு வந்தது. அப்போது சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், சூர்யா தாமதமாகத்தான் கணக்கைத் தாக்கல் செய்தார். வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்புத் தரவில்லை. சோதனைக்குப் பிறகு வருமானம் குறித்த முழு விவரங்களை அளிக்கவில்லை. வருமான வரி சட்டப்படி, வட்டி விலக்குப் பெற சூர்யாவுக்கு உரிமை இல்லை என வருமான வரித்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
சூர்யா தாக்கல் செய்த மனு தள்ளுபடி
வருமான வரித்துறையின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நடிகர் சூர்யா தரப்பு விளக்கம்
இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக சூர்யா தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் வருமான வரிக்கு வட்டி ஏற்கெனவே செலுத்திவிட்டோம். வட்டிக்கு வட்டி செலுத்துவதை எதிர்த்தே வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
எனவே மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீடு செய்யவுள்ளோம். இந்த வழக்கில் தாங்கள் வெற்றியடைந்தால் ரூ.56 லட்சம் எங்களுக்கு திரும்ப கிடைக்கும் எனவும் சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’எழுவர் விடுதலை குறித்து எங்களால் முடிவெடுக்க முடியாது’ - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை